ஆஸி., கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும் 6 வயது சிறுவன்: விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என விருப்பம்

தினகரன்  தினகரன்
ஆஸி., கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும் 6 வயது சிறுவன்: விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என விருப்பம்

அடிலெய்டு: இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்களுடன் இணைந்து 6 வயது சிறுவன் ஒருவனும் ஆஸ்திரேலிய சீருடையுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான். ஆர்ச்சி ஷில்லர் (Archie Schiller) எனும் 6 வயது சிறுவன் பிறப்பிலிருந்தே இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளான். இதன் காரணமாக அச்சிறுவனுக்கு இதுவரை 13 முறை அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது எனும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. சிறுவனின் உடல்நிலையையும், அவனிடம் இருக்கும் கிரிக்கெட் ஆவலையும் \'மேக் எ விஷ்\' (Make A Wish) எனும் உலகளாவிய தொண்டு நிறுவன அமைப்பு மூலம் அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், சிறுவனை ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய அனுமதி அளித்துள்ளது. மெல்போர்னில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டி வரை ஆஸ்திரேலிய வீரர்களுடன் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். லெக்-ஸ்பின்னர் ஆக வேண்டும் என்பதே தனது விருப்பம் என அந்த சிறுவன் கூறியுள்ளான். மேலும் தனது சுழற்பந்து வீச்சால் இந்திய கேப்டன் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை எனவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

மூலக்கதை