புதிய ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவம்:2019, ஏப்., 1 முதல் எளிய நடைமுறை அறிமுகம்

தினமலர்  தினமலர்
புதிய ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவம்:2019, ஏப்., 1 முதல் எளிய நடைமுறை அறிமுகம்

புதுடில்லி:‘‘புதிய, எளிமையான, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவங்கள், 2019, ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன,’’ என, மத்திய வருவாய் துறை செயலர், அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.


ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த நிறுவனங்கள், வணிகர்கள், மாதாந்திர விற்பனை விபரங்களுக்கு, ‘ஜி.எஸ்.டி.ஆர் – 1’ படிவத்தை பயன்படுத்துகின்றனர். கொள்முதல், விற்பனை உள்ளிட்ட, முழு வணிக விபரங்களை, மாதந்தோறும், ‘ஜி.எஸ்.டி.ஆர் – 3’ படிவத்தில் அளிக்கின்றனர். ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், இந்த படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதில், பல்வேறு சிரமங்கள் உள்ளதாக புகார் எழுந்தது.


அதனால், அந்த படிவங்களுக்கு மாற்றாக, எளிமையான, ‘சாஹஜ்’ மற்றும் ‘சுகம்’ என்ற இரு வரைவு படிவங்கள், கடந்த ஜூலையில், கருத்து கேட்புக்காக வெளியிடப்பட்டன.தொழில் கூட்டமைப்புகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், புதிய படிவங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு, ஏப்., 1 முதல், எளிமையான, புதிய, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவங்கள், நடைமுறைக்கு வரும் என, அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது:நடப்பு, 2018 --– -19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., மூலம், 13.48 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 7.76 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.மாதம், 1 லட்சம் கோடி ரூபாயாவது வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால், நவம்பரில், 4,000 கோடி ரூபாய் குறைந்து, 97 ஆயிரத்து, 637 கோடி ரூபாய் தான் வசூலாகிஉள்ளது. மார்ச்சுக்குள், நிதியாண்டின் வசூல் இலக்கு எட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


சட்ட நடவடிக்கை


ஜி.எஸ்.டி., செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் குறித்த தகவல்களை, வருவாய் துறை சேகரித்து வருகிறது. அத்தகையோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

அஜய் பூஷன் பாண்டே செயலர்,

மத்திய வருவாய் துறை

மூலக்கதை