2032ம் ஆண்டில் ஒலிம்பிக் நடத்த இந்தியா விண்ணப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2032ம் ஆண்டில் ஒலிம்பிக் நடத்த இந்தியா விண்ணப்பம்

புதுடெல்லி:  2032ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பம் செய்துள்ளது. காமன்வெல்த், சர்வதேச அளவிலான ஹாக்கி மற்றும் குத்துச்சண்டை, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன.

ஆனால் சர்வதேச அளவில் பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை இந்தியாவில் நடைபெறவில்லை. இதற்கான முயற்சியில் இந்திய ஒலிம்பிக் சங்கம் இறங்கியுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியா வந்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸிடம், 2032ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜிவ் மேத்தா கூறியதாவது: 2032ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த தீவிர முயற்சி எடுத்து வருவதுடன், இதற்கான விருப்ப கடிதத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் கொடுத்துள்ளோம்.

இதற்காக முறையான விண்ணப்பமும் செய்துள்ளோம்.

அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஒலிம்பிக் போட்டிகள் மும்பை, புதுடெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளது.

2032ம் ஒலிம்பிக் போட்டிக்கான நடைமுறைகள் 2022ம் ஆண்டில் துவங்கும். இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டம் வருகிற 22ல் நடக்கிறது.

இதில், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்தகோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, வடகொரியா, தென்கொரியா ஆகிய நாடுகள் ஒலிம்பிக் போட்டியை நடத்த விரும்பம் தெரிவித்து விண்ணப்பிக்க உள்ளன.

சீனா, கொரியா நாடுகள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடியும் என்றால், இந்தியாவாலும் ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.   

.

மூலக்கதை