கருவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தினமலர்  தினமலர்
கருவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.எல்.விஜய் இயக்கி உள்ள படம் கரு. இது சைவம் மாதிரியான ஒரு சிறப்பு திரைப்படம். இதில் சாய் பல்லவி, நாக சவுரியா, விரோனிகா அரோரா, ஆர்ஜே பாலாஜி, காந்த்ரி நிதின், ரேகா, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம் சி.எஸ்.இசை அமைத்திருக்கிறார். படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஜெ.எஸ்.ஸ்கீரின் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மணிமாறன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "நான் தற்போது கரு என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறேன். இந்த தலைப்பை 2011ம் ஆண்டே பதிவு செய்திருக்கிறேன். ஆனால் லைகா நிறுவனம் தான் தயாரிக்கும் படத்திற்கு எனது தலைப்பை பயன்படுத்துகிறது. அதற்கு தடைவிதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கரு என்ற தலைப்பை பயன்படுத்த லைகா நிறுவனத்துக்கு இடைக்கால தடைவிதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான பென்ஞ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "எங்கள் படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தலைப்புக்கு உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. எங்கள் வாதத்தை கேட்காமல் படத் தலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் கரு என்ற பெயரையே விளம்பரம் செய்திருப்பதால் அதற்கு தடை ஏற்பட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதிருக்கும்" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தனி நீதிபதி வழங்கிய இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது.

மூலக்கதை