வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கை தமிழ் இளைஞர்!

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கை தமிழ் இளைஞர்!

இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் நாளை அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.
 
 சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46)  என்ற இளைஞனே இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த நிலையில், தாம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் கூட வாய்ப்புகள் உள்ளதாக, சாந்தரூபன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
 
தம்முடன் இணைந்து மேலும் இருவருக்கு அவுஸ்ரேலியா அடைக்கலம் அளித்துள்ள அதேவேளை, தமக்கு அடைக்கலம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
 
இவர் தாம் விடுதலைப் புலிகளுக்காக சண்டைப்படகுகளை வடிவமைத்ததாகவும் கூறியுள்ளார்.
 
ஆனால், சாந்தரூபனின் பின்னணி தொடர்பாக சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர் விடுதலைப் புலிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர் என்பதற்கோ, படகுத் தளத்துக்குப் பொறுப்பானவராக இருந்தார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.
 
அதேவேளை, தங்கலிங்கம் சாந்தரூபன் ஆபத்தில் இருக்கிறார் என்பதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை என, தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.
 
தாம் நாடு கடத்தப்பட்டால், இலங்கை படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்படக் கூடும் என்று அவர் அச்சம் கொண்டுள்ளார் என்றும் தமிழ் அகதிகள் பேரவையின் தலைவர் ஆரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
 
2012ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய சாந்தரூபனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் தற்போது குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நாளை நாடு கடத்தவுள்ளதாக அவுஸ்ரேலிய எல்லைப் படை அறிவித்துள்ளது.

மூலக்கதை