இன்னும் கடுமையாக உழைப்பேன்... கேப்டன் கோஹ்லி உறுதி

தினகரன்  தினகரன்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டித் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, அணியின் நலனுக்காக இன்னும் கடுமையாக உழைக்கக் காத்திருப்பதாக கூறியுள்ளார்.செஞ்சுரியனில் நேற்று முன்தினம் நடந்த 6வது ஒருநாள் போட்டியில் 205 ரன் இலக்கை துரத்திய இந்திய அணி, கேப்டன் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் 32.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து வென்று 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்டமிழக்காமல் 129 ரன் (96 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசிய கோஹ்லி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 35வது சதமாகும்.6 போட்டியில் 3 சதம் உட்பட 558 ரன் குவித்ததுடன், 200 இன்னிங்சில் 9,500 ரன், 100 கேட்ச், சர்வதேச போட்டிகளில் 17,000 ரன் என்று பல்வேறு சாதனை மைல்கற்களையும் அவர் கடந்துள்ளார்.தென் ஆப்ரிக்க மண்ணில் வசப்படுத்திய சாதனை வெற்றி குறித்து கோஹ்லி கூறுகையில், ‘ஒரு கேப்டனாக எனது சிறப்பான செயல்பாட்டின் மூலமாக முன்னின்று போராட விரும்புகிறேன். இன்னும் 8-9 ஆண்டுகள் களத்தில் நீடிக்க முடியும் என நம்புகிறேன். அதை முழுமையாக பயன்படுத்தி முடிந்த அளவுக்கு சாதிக்க வேண்டும். அதற்காக இன்னும் கடுமையாக உழைக்க தயங்க மாட்டேன். கடவுளின் ஆசியால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நாட்டுக்காக விளையாடுவதுடன் தலைமையேற்கவும் வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய கவுரவம். வெற்றிகளை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல், அணிக்காக 120 சதவீதம் அர்ப்பணிக்க விரும்புகிறேன். சக வீரர்களின் ஒத்துழைப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்’ என்றார்.

மூலக்கதை