ஒருநாளில் 5 விக்கெட்... 16 வயதில் உலக சாதனை!

தினகரன்  தினகரன்

ஷார்ஜா: ஜிம்பாப்வே அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆப்கானிஸ்தான் அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ஷார்ஜாவில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே 38 ஓவரில் 134 ரன்னுக்கு சுருண்டது. பிரெண்டன் டெய்லர் 30, எர்வின் ஆட்டமிழக்காமல் 54 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆப்கன். பந்துவீச்சில் முஜீபுர் ரகுமான் 10 ஓவரில் 50 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் மிக இளம் வயதில் (16 வயது, 325 நாள்) 5 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை அவருக்கு சொந்தமானது.நபி, ரஷித் கான் தலா 2, அஷ்ரப் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 21.1 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 135 ரன் எடுத்து எளிதாக வென்றது. முகமது ஷாஷத் 75 ரன் (74 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), இசானுல்லா 51 ரன்னுடன் (53 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கன் 3-1 என முன்னிலை வகிக்க, கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

மூலக்கதை