‘லெஜண்ட்’ என்றாலும் டிரெஸ்ஸிங் அறையில் டிராவிட் உடன் நண்பரை போன்று பேச முடியும்: யு-19 உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன் பிரித்வி ஷா நெகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘லெஜண்ட்’ என்றாலும் டிரெஸ்ஸிங் அறையில் டிராவிட் உடன் நண்பரை போன்று பேச முடியும்: யு19 உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன் பிரித்வி ஷா நெகிழ்ச்சி

மும்பை: நியூசிலாந்தில் நடைபெற்ற ஐசிசி யு-19 (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற இறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம், ஐசிசி யு-19 உலக கோப்பையை 4 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் பிரித்வி ஷா அளித்த பேட்டி: உலக ேகாப்பையை வென்ற பிறகு யார்தான் தூங்க விரும்புவார்கள்? எனவே உலக கோப்பையை வென்ற தினம் எங்களுக்கு நீண்ட இரவு அமைந்தது.

 வெற்றிக்கு பின் நான் எனது மொபைல் போனை கூட பார்க்கவில்லை. வாழ்த்து ‘மெசேஜ்களை’ மறுநாள் காலையில்தான் பார்த்தேன்.

எனது தந்தையுடன் தொடர்பில் இருக்க நினைத்தேன். ஆனால் அவரது மொபைல் போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகியிருந்தது.

அவருக்கும் அது ‘பிஸியான’ நாளாக இருந்திருக்கும். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எந்த துறையாயினும், நம்மிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்.

இதன் மூலம் கேப்டனின் பணி எளிதாகி விடுகிறது.

 உலக கோப்பையை கையில் ஏந்திய தருணம் அற்புதமானது.

இந்தியாவிற்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது கனவு. யு-19 அளவில் நான் அதை சாதித்து விட்டேன்.

சீனியர் அளவிலும் இதை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.

‘கேப்டன்ஸி’ என்பது, களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என்னை அதிக பொறுப்புள்ள நபராக உருவாக்கியுள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பதை ‘என்ஜாய்’ செய்தேன்.



இந்த பயணம் முழுவதுமாக வீரர்கள் உள்பட அனைவரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினர். உலக கோப்பையில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என நம்பினேன்.

அதை செய்தும் காட்டியுள்ளோம். ‘நாங்கள்தான் சிறந்தவர்கள்’ என்ற பொதுவான நம்பிக்கைதான் இது.

இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் ராகுல் டிராவிட் சார் (தலைமை பயிற்சியாளர்) மற்றும் உதவி பணியாளர்களுக்கு செல்ல வேண்டும். அவர்களின் வேலையை பார்க்க முடியாது.

ஆனால் வீரர்களை போலவே அவர்களின் பங்களிப்பும் இருந்தது.

ராகுல் டிராவிட் சார் ஒரு லெஜண்ட்.

ஆனால் அவருடன் நாங்கள் ஒரு நண்பரை போல் பேசும் வகையிலான சூழலை,  டிரெஸ்ஸிங் அறையில் உருவாக்கியிருந்தார்.   அவர் மிகவும் எளிமையான மனிதர். தொடக்க வீரரின் பங்களிப்பு மிக முக்கியமானது என அவர் என்னிடம் கூறியுள்ளார்.

ஏனெனில் பெரிய இலக்கை எட்டவோ அல்லது பெரிய இலக்கை நிர்ணயிக்கவோ இது உதவும். எனவே அனைத்து வகையிலான போட்டிகளிலும், ‘உனது விக்கெட் முக்கியமானது’ என அவர் என்னிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிரித்வி ஷா கூறினார்.

.

மூலக்கதை