ஆச்சரியம் அளித்த இந்திய வேகப்பந்து வீச்சு : டி வில்லியர்ஸ் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆச்சரியம் அளித்த இந்திய வேகப்பந்து வீச்சு : டி வில்லியர்ஸ் பாராட்டு

ஜோஹன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரை, 2 போட்டிகளின் முடிவில் 2-0 என இந்தியா இழந்து விட்டது.

3வது மற்றும் கடைசி டெஸ்ட், வரும் 24ம் தேதி ஜோஹன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இது குறித்து தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் அளித்த பேட்டி: இந்திய அணியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டுள்ளேன்.

குறிப்பாக வேகப்பந்து வீச்சில் இந்தியா எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த துறையில் அதிக திறன்களை இந்தியா வெளிக்காட்டியுள்ளது.

நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்தியாவின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. முக்கியமான மற்றும் நல்லதொரு டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் ஒரு பகுதியாக நானும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அணியின் ஒட்டுமொத்த கடின உழைப்பே இதற்கு காரணம். 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் விராட் கோஹ்லியின் ஆட்டம் அபாரமாக இருந்தது (153 ரன்களை விளாசினார்).

அதற்காக நான் அவரை பாராட்டினேன். அடுத்து நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

செஞ்சுரியன் ஆடுகளத்துடன் ஒப்பிடுகையில் பந்து அங்கு அதிக பவுன்ஸ் மற்றும் வேகத்துடன் வரும். இந்த போட்டியில் தென் ஆப்ரிக்க டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை ஸ்கோர் செய்ய வேண்டும்.

கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் இதை செய்ய நாங்கள் முயன்றோம். ஆனால் ஆடுகளங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

இதற்கான பாராட்டு இந்திய பந்து வீச்சாளர்களுக்குதான் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



 நடப்பு தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ்தான். அவர் 4 இன்னிங்ஸ்களில் 200 ரன்களை ஸ்கோர் செய்துள்ளார்.

2 கடினமான ஆடுகளங்களில் அதிக ரன்களை ஸ்கோர் செய்தது குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், ‘’நான் பந்தை நன்றாக கவனித்து விளாசுவேன் அவ்வளவுதான். கிரிக்கெட்டின் 3 வடிவங்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் உணரவில்லை என எப்போதுமே கூறி கொண்டுதான் உள்ளேன்.

ஆடுகளம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மை பொருத்தி கொள்ளும் மனநிலையில்தான் எல்லாம் உள்ளது. தற்போது எனது வாழ்க்கையில் நான் சிறந்த பார்மில் இருப்பதாக உணர்கிறேன்’’ என்றார்.



கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த தென் ஆப்ரிக்க அணி 4 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றது. இதில், டெஸ்ட் தொடரை 3-0 என இந்தியாவும், ஒரு நாள் தொடரை 3-2, டி20 தொடரை 2-0 என தென் ஆப்ரிக்காவும் வென்றன.

2015ம் ஆண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது டெஸ்ட் தொடரை 3-0 என தென் ஆப்ரிக்கா முழுமையாக வெல்ல முயலுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டி வில்லியர்ஸ், ‘’2015ம் ஆண்டு என்ன நடந்தது? என்பது எனக்கு நினைவில் இல்லை. ஓ. . . நாங்கள் ஒரு நாள் தொடரை வென்றோம் அல்லவா’’ என வேடிக்கையாக கூறினார்.


.

மூலக்கதை