வலுவான நிலையில் உள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு இன்று அழுத்தத்தை உண்டாக்க முயல்வோம்: பும்ரா நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வலுவான நிலையில் உள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு இன்று அழுத்தத்தை உண்டாக்க முயல்வோம்: பும்ரா நம்பிக்கை

செஞ்சுரியன்: இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்ஸில், 335 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மார்க்ரம் 94, ஹசீம் அம்லா 82, கேப்டன் டூ பிளஸிஸ் 63 ரன்கள் விளாசினர். அஸ்வின் 4, இஷாந்த் சர்மா 3, முகமது ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில், 307 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோஹ்லி 153, முரளி விஜய் 46, அஸ்வின் 38 ரன்கள் விளாசினர்.

மோர்னே மோர்கல் 4, கேசவ் மகாராஜ், பிளாண்டர், ரபாடா, லுங்கி நிகிடி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 28 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.

டி வில்லியர்ஸ் 50, டீன் எல்கர் 36 ரன்களுடன் இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடர்கின்றனர். முன்னதாக மார்க்ரம் 1, ஹசீம் அம்லா 1 ரன்களில், பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.

8 விக்கெட்கள் உள்ள நிலையில் தென் ஆப்ரிக்கா 118 ரன்கள் முன்னிலை பெற்று, வலுவான நிலையில் உள்ளது.

 இது குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறுகையில், ‘’இந்த போட்டி எந்த அணிக்கு சாதகமாக வேண்டுமானாலும் செல்லலாம். தென் ஆப்ரிக்க அணிக்கு நாளை (இன்று) அழுத்தத்தை உண்டாக்க முயல்வோம்.

போட்டி இன்னமும் சமநிலையில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். டி வில்லியர்ஸ் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த பல ஆண்டுகளில் டி வில்லியர்ஸ் இதனை நிரூபித்துள்ளார். உலகின் பல்வேறு இடங்களில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்.

அவரது விக்கெட்டை கைப்பற்றுவது சவாலானது. எனினும் அவருக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது எனக்கு நம்பிக்கையை அளிக்கும்.

இந்த போட்டியில் இன்னும் நிறைய ஆட்டம் எஞ்சியுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைய தேவையில்லை.

விராட் கோஹ்லியின் இன்னிங்ஸ் எங்களுக்கு மிக முக்கியமானது. அவர்தான் எங்களை மீண்டும் போட்டிக்குள் அழைத்து சென்றார்.

நேற்று நாங்கள் சில விக்கெட்களை விரைவாக இழந்து விட்டோம். அதனால் விராட் கோஹ்லி நிலைத்து நின்று விளையாடினார்.

கடைசி வரை போராடினார். ஒரு கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதும், முன்னின்று வழிநடத்துவதும் நல்லதுதான்’’ என்றார்.



.

மூலக்கதை