இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டி டெஸ்ட் அணிகளுக்கு கடும் சவால் அளிப்போம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சபதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டி டெஸ்ட் அணிகளுக்கு கடும் சவால் அளிப்போம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சபதம்

புது டெல்லி: கத்துக்குட்டி என்ற அடையாளத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் பலனாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் விரைவில் வெளியிடும் என திர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் இந்த முடிவுக்கு, பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் தலைவரான வினோத் ராய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘’ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்ட பிசிசிஐ ஒப்புதல் வழங்கியிருப்பதும், அவர்களுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் அவர்களை டெஸ்ட் உலகிற்கு வரவேற்பதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியான சபீக் ஸ்டானிஸ்கய் இது குறித்து கூறுகையில், ‘’ஆப்கானிஸ்தானின் அறிமுக டெஸ்ட் போட்டியை இந்தியா நடத்தும் செய்தியை ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் தேசமும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எந்த நாட்டிற்கு எதிராகவும்
நாங்கள் கடும் போட்டியை அளிப்போம்’’ என்றார்.


.

மூலக்கதை