இலங்கை அணி அபார வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை அணி அபார வெற்றி!

தொடர்ந்து 12 தோல்விகளைச் சந்தித்த இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்த இலங்கை, அடுத்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
 
முதல் ஒரு நாள் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் திசாரா பெரேரா பந்துவீச்சை தெரிவு செய்தார்.
 
அதன்படி, ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காந்திருந்தது.
 
அதில், ஷிகர் தவான், ரன்கள் ஏதும் எடுக்காமல், டக் அவுட் முறையில் வெளியேறினார். தவானைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைவர் ரோகித்சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
 
இதற்கு அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட் முறையில் வெளியேற இந்திய அணி 8.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
 
தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டே (2), ஷ்ரேயாஸ் ஐயர் (9), ஹர்திக் பாண்டியா (10), புவனேஸ்வர் குமார் (0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 16.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 29 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.
 
இதையடுத்து டோனி மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி ஓரளவு ஓட்டங்கள் சேர்த்தது. குல்தீப் 19 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு டோனியுடன் பும்ரா இணைந்தார்.
 
கடைசியில் டோனி தனது அதிரடியை காட்டி பவுண்டரிகள், சிக்சர்கள் என்று விளாசினார். 15 பந்துகள் நிலைத்து நின்ற பும்ரா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
 
அடுத்த சாஹல் டோனியுடன் இணைந்தார். இந்த நிலையில் அதிரடி காட்டிய டோனி தனது 67வது அரைசதத்தை கடந்தார்.
 
இறுதியில், 38.2வது ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டோனி 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 65 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
 
இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளும், மேத்யூஸ், பெரேரா, பதிரனா, தனஜெய ஆகியோர் தல ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
 
113 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இலங்கை அணியின் தரங்கா 49 ஓட்டங்கள் எடுத்தார். மேத்யூஸ் 25 ஓட்டங்களும் டிக்வெல்லா 26 ஓட்டங்களும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
 
இதன் மூலம் இலங்கை அணி ஒருநாள் போட்டியில் அடைந்த 12 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
 

மூலக்கதை