விஜய் 62 அரசியல் படம் : உறுதியானது

தினமலர்  தினமலர்
விஜய் 62 அரசியல் படம் : உறுதியானது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஒரு அரசியல் படமாக உருவாகி வருகிறது என ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக்காகப் போடப்பட்ட அரசியல் மாநாடு ஒன்றின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதன் மூலம் இந்தப் படம் அரசியல் படம் தான் என்பது உறுதியாகியுள்ளது. பழ. கருப்பையா இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராதாரவியும் அரசியல் கட்சித் தலைவராக நடிக்கிறார். இவர்கள் இருவரின் பேனர்கள், கட் அவுட்கள் அடங்கிய அரசியல் கட்சிகள் இணைப்பு மாநாடு ஒன்று நடக்கும் விதத்தில் அந்த பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி வசனம் பேசியதால் விஜய்க்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் படத்திற்கு மக்கள் ஆதரவு இருந்ததால் அந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. விஜய்யும் அடிக்கடி அரசியல் கருத்துக்களை சொல்லி வருவதால் இந்தப் படத்தை வேண்டுமென்றே ஒரு அரசியல் படமாக உருவாக்கி வருகிறார்கள் என்றே கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

படத்தில் என்ன மாதிரியான அரசியல் வசனங்கள், காட்சிகள் இடம் பெறுகின்றன என்பதைப் பொறுத்தே இப்படத்திற்கான வரவேற்பு அமையும். இன்றைய சூழலில் அரசியல் படம் என்பது விஜய்யைப் பொறுத்தவரையில் சிக்கலுக்குள்ளாக்கும் விஷயம்தான். அதை அவர் எப்படி மீறி வெளியில் வருகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மூலக்கதை