சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி ஆட்டத்திற்கு செல்வது யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி ஆட்டத்திற்கு செல்வது யார்?

மும்பை : ஐபிஎல் டி20 தொடரின் 11வது சீசன் இறுதிப்  போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான  ஆட்டத்தில்,  புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த சன்ரைசர்ஸ்  ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று  மோதுகின்றன. பரபரப்பான  இப்போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.   கடந்த ஏப்ரல் 7ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தம் 8  அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை உள்ளூர் மற்றும்  வெளியூர் அடிப்படையில்  லீக் சுற்றில் மோதின.

விறுவிறுப்பான லீக் சுற்றில் அனைத்து அணிகளும் தலா 14   ஆட்டங்களில் விளையாடிய நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 18  புள்ளிகள் பெற்றன. ரன்ரேட் அடிப்படையில்  முன்னிலை பெற்ற சன்ரைசர்ஸ் முதலிடம் பிடித்தது.

சென்னை அணிக்கு  அடுத்த  இடம் கிடைத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 புள்ளிகளுடன் 3வது  இடமும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 4வது  இடமும் பிடித்தன.

தலா  12 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்த பெங்களூர், மும்பை, பஞ்சாப் அணிகள்  தங்களின்  கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி பிளே ஆப் சுற்றுக்கு  முன்னேறும் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்துடன்  வெளியேறின. டெல்லி டேர்டெவில்ஸ்  அணி 10 புள்ளிகளுடன் கடைசி இடம் பிடித்தது.

லீக் சுற்றின் முடிவில் முதல் 4  இடங்களைப் பிடித்த ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே   ஆப் சுற்றில் மோதுகின்றன. மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு  தொடங்கும் ஆட்டத்தில்  சன்ரைசர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்  பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

இந்த போட்டியில்  வெற்றி பெறும்  அணி, 27ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு  நேரடியாகத் தகுதி பெறும்.


.

மூலக்கதை