முதலில் தோற்றதற்கு பதிலடியாக மும்பை அணியை பழி தீர்த்தது பெங்களூர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதலில் தோற்றதற்கு பதிலடியாக மும்பை அணியை பழி தீர்த்தது பெங்களூர்

பெங்களூர்: மும்பை அணியிடம் இந்த ஐபிஎல் சீசனில் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடியாக பெங்களூர் அணி நேற்று  வெற்றி பெற்று பழிதீர்த்தது. பெங்களூரில் நேற்று ஐபிஎல் போட்டியின் 31வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பெங்களூர் அணியில் அஸ்வின் முருகனுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.

காய்ச்சலால் அவதிப்படும் டிவில்லியர்சும் அணியில் இடம் பெறவில்லை.   மும்பை அணியில் காயமடைந்திருந்த இவின் லீவிசுக்கு பதிலாக பொல்லார்டு சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

அதனையடுத்து முதலில் விளையாடிய பெங்களூர் அணியின் மனன்வோரா அடித்து விளையாட, குயிண்டன் டிகாக் தடுத்து விளையாடினார். அணியின் ஸ்கோர்  38 ஆக இருந்த போது 5வது ஓவரின் கடைசிப்பந்தில் டிகாக் அவுட்டானார்.

ஆட்ட நேர முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. வோரா-45(31பந்துகள்), டிகாக்-7(13), மெக்கல்லம்-37(25), கோலி-32(26), மன்தீப்சிங்-14(10),  வாஷிங்டன் சுந்தர்-1(3), டிம்சவுத்தி-1(2) ரன்கள் சேர்த்து அவுட்டானார்கள்.

கிராண்ட்ஹோம்-23(10), உமேஷ் யாதவ்-1(2) ஆகியோர் அவுட்டாகாமல் இர ுந்தனர். மும்பை அணியின் மிச்சல், பும்ரா, மார்கண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெற்ற பெற வாய்ப்புள்ள இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

ஆனால் அணியின் ஸ்கோர் 5 ஆக இருந்த போது முதல் ஓவரின் கடைசிப்பந்தை சந்தித்த இஷான் கிஷன் டக் அவுட்டானார். அடுத்து 3. 1 ஓவரில் ஸ்கோர் 21 ஆக இருந்த போது சூர்யகுமார் யாதவ் 9 ரன்னில் அவுட்டானார்.


ஆனாலும் இலக்கு குறைவு என்பதால் கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கையுடன் களமிறங்கினார். ஆனால் அவர் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறியதும், மும்பையின் வெற்றி வாய்ப்புகள் மங்கத் தொடங்கின.

அடுத்து களமிறங்கிய பொல்லார்டும் 10 ரன்னில் வெளியேறினார்.
அதன்பிறகு  டூம்னியும், ஹர்திக் பாண்ட்யாவும் கொஞ்ச நேரம் நிலைத்து விளையாடினர்.

அவர்கள் 5வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்தனர். டூம்னி  29 பந்தில் 23 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.



அதன்பிறகு சகோதரர்கள் ஹர்திக் பாண்ட்யாவும், க்ருணால் பாண்ட்யாவும் ஜோடி சேர்ந்தனர்.   இவர்கள்  6வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனர்.     ஹர்திக் 42பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து  19வது ஓவரிலும், க்ருணால் 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து 20வது ஓவரிலும் அவுட்டானார்கள். முடிவில் பென் கட்டிங் 6 பந்தில் 12 ரன்களுடனும்,  மிச்சல் ஒரு பந்தை கூட சந்திக்காமலும் களத்தில் நின்றனர்.

ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 153  எடுத்து  14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பெங்களூர் அணியின் டிம்சவுத்தி, உமேஷ் யாதவ், முகம்மது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்ற  14வது லீக் ஆட்டத்தில் மும்பையிடம் தோற்றதற்கு நேற்று நடைபெற்ற போட்டியில் பதிலடியாக பழிதீர்த்தது.

.

மூலக்கதை