நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பவுலிங் அட்டாக்தான் மிக வலுவானது: ஜேம்ஸ் பால்க்னர் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பவுலிங் அட்டாக்தான் மிக வலுவானது: ஜேம்ஸ் பால்க்னர் பாராட்டு

சண்டிகர்: ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டி சண்டிகரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலும், வெற்றியை தொடர சன்ரைசர்ஸ் அணி முயலும்.

இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் அணியின் பவுலிங் அட்டாக்தான் மிகவும் வலுவானது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’பவுலிங் அட்டாக் அடிப்படையில் பார்த்தால், சன்ரைசர்ஸ் அணிதான் மிகவும் வலுவானது.

சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் மிகவும் நல்ல பார்மில் உள்ளார். டி20 போட்டிகளை பொறுத்தவரை, உலகின் மிகவும் சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவராக ரஷித்கான் உள்ளார்.

அவரும் சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்தவர். எனவேதான் சன்ரைசர்ஸ் அணியை நம்பர்-1 என்கிறேன்.


இந்த வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நான் 2வது இடம் கொடுப்பேன். ஏனெனில் பும்ரா, முஸ்டாபைஜுர் ரகுமான் என 2 சிறந்த டெத் ஓவர் பவுலர்கள் (கடைசி கட்ட ஓவர்களை வீசக்கூடிய பவுலர்கள்), அவர்களிடம் உள்ளனர்.

பும்ரா பார்மில் இல்லை என கூறுவது சரியாக இருக்காது’’ என்றார்.

இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி குறித்து சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில், ‘’களத்திற்கு உள்ளே சென்று, உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என, எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்.

பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், லோகேஸ் ராகுல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளதால், அவர்களை கட்டுப்படுத்த ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா? என என்னிடம் கேட்கிறீர்கள். அவர்கள் இருவருக்கு எதிராக மட்டுமல்ல, பஞ்சாப் அணிக்காக விளையாட வாய்ப்புள்ள ஒவ்வொரு வீரருக்கு எதிராகவும் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பது குறித்து விவாதித்துள்ளோம்’’ என்றார்.



.

மூலக்கதை