வைரல் வீடியோவின் உருக்கமான பின்னணி 2 சிறுமிகளை காப்பாற்றிய ப்ரீத்தி ஜிந்தா

தினகரன்  தினகரன்

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார். பஞ்சாப் விளையாடும் போட்டிகள் என்றால், ப்ரீத்தி ஜிந்தா நிச்சயம் மைதானத்திற்கு வந்து விடுவார். ஒட்டுமொத்த தேசமும் தொலைக்காட்சி வழியாக பார்த்து கொண்டிருந்தாலும், தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்த அவர் தவறுவதில்லை. அடிக்கடி சிரிப்பார். பஞ்சாப் மோசமாக விளையாடினால், திடீரென சோகமாகி விடுவார். இதுதான் ப்ரீத்தி ஜிந்தா. அவருக்காகவே பஞ்சாப் அணிக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் ஏராளம். அவருக்காகவே பஞ்சாப் அணியின் போட்டிகளை பார்ப்பவர்களும் ஏராளம். இந்த நிலையில் ரசிகர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார் ப்ரீத்தி ஜிந்தா. நடப்பு ஐபிஎல் தொடரில், கடந்த 15ம் தேதி நடைபெற்ற 12வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. ஆம், நம்ம தல டோனி முதுகு வலியுடன் போராடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்களை (44 பந்துகள், 6 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய போட்டிதான் அது. உச்சகட்ட டென்ஷனுக்கு மத்தியில், அதுவும் டோனி களத்தில் இருக்கையில் வெற்றி பெற்றதால், உற்சாகமடைந்த ப்ரீத்தி ஜிந்தா, பஞ்சாப் அணியின் ஜெர்சிகளை எடுத்து, ரசிகர்களுக்கு வினியோகித்து கொண்டிருந்தார். அப்போது என்ன நடந்தது என தெரியவில்லை. திடீரென சில வினாடிகள் ஒரு சிலரை நோக்கி கோபமாக பேசிய ப்ரீத்தி ஜிந்தா, பின்னர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று, மீண்டும் ஜெர்சிக்களை வினியோகிக்க தொடங்கினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவ, ப்ரீத்தி ஜிந்தா சர்ச்சையில் சிக்கினார். ஆனால் எதற்காக அவர் கோபமாக பேசினார்? என்பது தெரியாமல் இருந்து வந்தது.  இந்த வைரல் வீடியோவுக்கு பின்னணியில் இருக்கும் உண்மையை ப்ரீத்தி ஜிந்தாவே தற்போது வெளியிட்டுள்ளார். ‘’2 சிறுமிகள் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், சற்று நகர்ந்து கொள்ளும்படி ரசிகர்களை நோக்கி கூறினேன். அந்த சிறுமிகள் சுவாசிக்க இடைவெளி அளிக்கும்படி அவர்களிடம் கேட்டு கொண்டேன்’’ என டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.

மூலக்கதை