பதற்றமின்றி விளையாட உதவினார் எவின் லூயிஸ்...

தினகரன்  தினகரன்

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான லீக் ஆட்டத்தில், ‘பதற்றம் அடையாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எவின் லூயிஸ் எனக்கு உதவினார்’ என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா பாராட்டி உள்ளார். வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தியது. டாசில் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச, மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது. முதல் 2 பந்தில் 2 விக்கெட் சரிந்த நிலையில், எவின் லூயிஸ் - ரோகித் ஷர்மா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தது. லூயிஸ் 65 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), ரோகித் 94 ரன் (52 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர்.அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 92 ரன் (62 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசியும், மற்ற வீரர்கள் ஒத்துழைக்காமல் ஏமாற்றமளித்தனர். டி காக் 19, மன்தீப் 16, வோக்ஸ் 11 ரன் எடுக்க, டி வில்லியர்ஸ் உட்பட மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.தொடர்ச்சியாக 3 தோல்வியுடன் பின்தங்கியிருந்த மும்பை அணி, முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப் பட்டியலிலும் 6வது இடத்துக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது பெற்ற ரோகித் ஷர்மா கூறியதாவது:  எவின் லூயிஸ் பேட் செய்யும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். பந்தை அதிரடியாக விளாசுவதில் அவர் வல்லவர். மறுமுனையில் லூயிஸ் விரைவாக ரன் குவித்தது என் மீதான நெருக்கடியை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனால் நான் பதற்றமின்றி நிதானமாக விளையாட முடிந்தது. செட்டில் ஆன பேட்ஸ்மேன் நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டும் என்பதே எங்கள் வியூகம். தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோற்றிருந்தாலும், இந்த போட்டியில் தன்னம்பிக்கையுடன் விளையாடினோம். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கு காரணம். மெக்லநாகன், குருணல், மயாங்க் மூவரும் பந்துவீச்சில் அசத்தினர். குறிப்பாக, 20 வயது இளம் வீரர் மயாங்க் மார்கண்டே நெருக்கடியான கட்டத்திலும் துல்லியமாகப் பந்துவீசினார். அது அத்தனை எளிதல்ல. பேட்டிங் வரிசையில் தொடர்ந்து மூன்றாவது வீரராகவே களமிறங்க முடிவு செய்துள்ளேன். அதில் அடிக்கடி மாற்றம் செய்யும் எண்ணமில்லை.  இவ்வாறு ரோகித் கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் 22ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஜெய்பூரில் சந்திக்கிறது.

மூலக்கதை