காமன்வெல்த் விளையாட்டு போட்டி பதக்கம் வென்ற வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

தினகரன்  தினகரன்

சென்னை: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 3வது இடத்தை பிடித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள்தான் அதிக பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளனர். ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் தீபிகா பாலிகல் கார்த்திக், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தாங்கள் பெற்ற வெள்ளிப் பதக்கத்தை காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஸ்குவாஷ் போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று நம் நாட்டுக்கு வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. போட்டி மிகக் கடினமாக இருந்தது. எதிரணியினர் சிறப்பாக விளையாடினர். ஆனாலும், நாங்கள் அவர்களை விட சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று, நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளோம். எங்களது கடினமான பயிற்சியினாலேயே இந்த வெற்றியை பெற முடிந்தது. இந்த காமன்வெல்த் வெற்றி, மேலும் பல வெற்றிகளை பெற எங்களுக்கு தூண்டுகோலாக இருக்கும்.அடுத்ததாக ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்க உள்ளோம். அதில், நம் நாட்டுக்கு தங்கப்பதக்கம் வாங்க கடினமாக முயற்சி செய்வோம். ஸ்குவாஷ் விளையாட்டு என்பது, மிக சிறப்பானது. ஆனால், ஒலிம்பிக் போட்டியில் இந்த விளையாட்டு சேர்க்கப்படாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டால் மிகு்ந்த மகிழ்ச்சியடைவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற சரத்கமல், அமல்ராஜ், சத்தியன் ஆகியோர் நேற்று பகல் ஒரு மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களுக்கும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூலக்கதை