இது ஸ்டிரைக் அல்ல; சினிமா துறையை புதுப்பிக்கிறோம்… : விஷால்

FILMI STREET  FILMI STREET
இது ஸ்டிரைக் அல்ல; சினிமா துறையை புதுப்பிக்கிறோம்… : விஷால்

கடந்த 3 வாரங்களாக எந்தவொரு புதிய தமிழ் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகள், சூட்டிங் எதுவும் நடத்தக் கூடாது என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

(சென்னையில் உள்ள தியேட்டர்களில் பழைய ஹிட்டான படங்களை திரையிட்டு ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.)

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் இந்த ஸ்டிரைக் குறித்து பேசியதாவது…

இப்போது நடக்கும் ஸ்டிரைக்கை வேலைநிறுத்தம் என்று சொல்வதை விட சினிமா துறையை புதுப்பிக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

திங்கட்கிழமை டைரக்டர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை கேமராமேன்களுடன் பேச்சு வார்த்தை.

அதன்பிறகு நடிகர் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்துவோம். எங்கள் பிரச்சினைகளை தியேட்டர் அதிபர்கள் புரிந்து கொள்ளும்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

சினிமாதுறை சார்ந்த அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும். இது ஈகோ வினாலோ, அவசரப்பட்டோ எடுத்த முடிவு அல்ல.

இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும்போது ஒரு கஷ்டம் வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் போது இன்னொரு கஷ்டம் இருக்கிறது. நாங்கள் கேட்பது அடிப்படை வி‌ஷயங்கள்.

டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்குங்கள் என்று சொல்லும்போது அதை அவர்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். ஒரு வண்டி வாங்குகிறோம் என்றால் 36 தவணை அல்லது 48 தவணை இருக்கும்.

48-வது தவணைக்கு பிறகு எனக்கு ஒரு தெளிவு வரும். வண்டி எனக்கு சொந்தம். 49-வது மாதம் நான் கட்டத் தேவையில்லை. ஆனால் சினிமாவில் என்னவென்றால் நாங்கள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். கட்டக்கூடாத கட்டணத்தை இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறோம்.

இன்னொன்று, மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். பாப்கார்ன் செலவிலும், உணவு பொருட்கள் செலவிலும் விஷால் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்றால் நான் அதற்கு வரவில்லை.

மக்கள் சந்தோ‌ஷமாக வந்து படம் பார்க்க வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அது ரொம்ப ஆடம்பரமான வி‌ஷயமாக தெரியும்போது அதை எப்படி முறைப்படுத்தி அவர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முயற்சி.

இதுதொடர்பாக நிறைய வி‌ஷயங்களை நாங்கள் பேசுகிறோம். ஆன்லைன் முன்பதிவுக்கு 1 டிக்கெட்டுக்கு கூடுதலாக 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். நான் குடும்பத்துடன் படம் பார்க்க செல்லும்போது 1 டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதல் என்பது எனக்கு அதிகமாக தெரிகிறது.

அதைத்தான் சொல்கிறோம். ஏன் 30 ரூபாய் போடுகிறீர்கள், 5 ரூபாய் போடுங்கள். 25 ரூபாயை சலுகையாக கொடுங்கள். அவர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். இதைத்தான் நாங்கள் விண்ணப்பமாக வைக்கிறோம். இது அவர்களுடன் சண்டை போடுவதற்காக அல்ல.

ஏனென்றால் தயாரிப்பாளர்களால் முடியாது. இதையெல்லாம் செய்யும் போதுதான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். இதுபோல கிடைக்கும் சேமிப்பை தயாரிப்பாளர் இன்னொரு படம் எடுக்கத்தான் பயன்படுத்துவார்.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நாம்தான் 2 முறை வரி செலுத்துகிறோம்.

அதை 30 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்துக்கு கொண்டு வந்தார்கள். அதுவே இப்போது எங்களால் முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

ஜி.எஸ்.டி. உள்பட அனைத்து வரிகளையும் மக்கள் மீது திணிக்கும்போது டிக்கெட் விலை அதிகரிக்கிறது. அது பெரிய படங்களுக்கு தாங்குகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தாங்கவில்லை.

டிக்கெட் விற்பனை கம்ப்யூட்டர் மயமானால்தான் எத்தனைபேர் பார்த்துள்ளனர். என்பது எனக்கு தெரியவரும். தியேட்டர் அதிபர்கள் அந்த கணக்கை கொடுத்தால்தான் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க முடியும்.

இது ஈகோ சண்டை அல்ல. எங்களால் முடியவில்லை. இதை சரி கட்டிய பிறகுதான் தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு படம் எடுப்பதிலோ, வெளியிடுவதிலோ நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று நம்புகிறேன்.” இவ்வாறு விஷால் பேசினார்.

Its not Cinema Strike We are renovating Industry says Producers Council President Vishal

மூலக்கதை