பெங்களூருவில் இன்று பரபரப்பான பைனல் ஐஎஸ்எல்-4 சாம்பியன் யாரு?

தினகரன்  தினகரன்

சென்னை : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 4வது சீசனில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப்போட்டியில், சென்னையின் எப்சி - பெங்களூரு எப்சி அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, பெங்களூரு ஸ்ரீகன்டீரவா ஸ்டேடியத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய திருவிழாவாக அமைந்த இந்த தொடர், கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி  தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் தலா 18 லீக் போட்டிகளில் விளையாடின. 90 போட்டிகள் கொண்ட லீக் சுற்று மார்ச் 4ம் தேதியுடன் முடிவடைந்தது. நடப்பு தொடரில் அறிமுக அணியாகக் களமிறங்கிய பெங்களூரு அணி  13 வெற்றி, ஒரு சமன்,  4 தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து அசத்தியது. சென்னையின் எப்சி 9 வெற்றி, 5 சமன், 4 தோல்விகளுடன் 32 புள்ளிகள் பெற்று 2வது இடமும்,  தலா 9 வெற்றி, 3 சமன், 6 தோல்விகளுடன் தலா 30 புள்ளிகள் பெற்ற கோவா, புனே அணிகள் முறையே 3வது, 4வது இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதில் 2 கட்டமாக நடைபெற்ற அரை இறுதி ஆட்டங்களில்   பெங்களூரு - புனே அணிகள்மோதின. புனேவில் நடந்த முதல் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெங்களூருவில் நடந்த 2வது போட்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வென்ற பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.அதேபோல் கோவாவில்  சென்னை - கோவா அணிகள்  மோதிய முதல்கட்ட அரை இறுதி போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்நிலையில், சென்னையில் நடந்த 2வது போட்டியில் சென்னையின் எப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இடம் பிடித்தது. ஐஎஸ்எல் 4வது சீசனில் கோப்பையை முத்தமிடப் போவது யார் என்பதை முடிவு செய்யும் பரபரப்பான பைனல், பெங்களூருவில் இன்று நடைபெற உள்ளது. முதல் முறையாகக் களமிறங்கிய தொடரிலேயே பைனலுக்கு முன்னேறி உள்ளதால் பெங்களூரு வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அந்த அணி ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்திலேயே இருந்தது.  அரையிறுதிக்கு தகுதிபெற்ற மற்ற 3 அணிகளும் தலா 9 போட்டிகளில் மட்டுமே வென்ற நிலையில், பெங்களூரு அணி 13 போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்றில் பெங்களூரு அணி 35 கோல், சென்னை அணி 24 கோல் அடித்துள்ளன. அதே நேரத்தில்,  2 கட்ட அரை இறுதியில்  பெங்களூர் அணி 3 கோல், சென்னை 4 கோல் போட்டுள்ளது.சொந்த ஊரில் இறுதிப் போட்டி நடைபெறுவது பெங்களூரு அணிக்கு சாதகமான அம்சம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அதிக அளவில் கிடைக்கும். ஆனால். இந்த சாதகமான அம்சத்தை  சென்னை அணி ஏற்கனவே தவிடுபொடியாக்கி உள்ளது. லீக் சுற்றில் பெங்களூருவில் நடைப்பெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை வென்றுள்ளது.  அதில் ஒரு கோல் தமிழக வீரரான தனபால் கணேஷ் போட்டது. அசத்தக் காத்திருக்கும் நட்சத்திரங்கள்: தனபால் கணேஷ் போட்டிக்கு போட்டி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சென்னை அணியின் கோல் மன்னன் ஜேஜே லால்பெகுலா,  தடுப்பு சுவராக கோல்கீப்பர் கரண்ஜித் சிங் நம்பிக்கை அளிக்கின்றனர். கிரிகோரி நெல்சன், ராபெல் அகஸ்டோ மெயில்சன் அல்வேஸ், இனிகோ கல்டரென் ஆகியோரையும் ஒவ்வொரு விதத்தில் ஜொலிக்க வைக்கிறார் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி. பெங்களூர் அணியிலும் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் உள்ள மிக், கேப்டன் சுனில் செத்ரி என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். முன்கள ஆட்டக்காரர்களான இவர்கள் முறையே 14, 13 கோல் அடித்துள்ளனர். தற்காப்பு வீரர்களான ராகுல், சுபாஷியா போஸ் ஆகியோர் பெங்களூர் மீது அதிக கோல் விழாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். நடுகள ஆட்டக்காரர் ரோட்ரிக்ஸ், டிமாஸ் டெலேடோ , எரிக் பார்டாலு ஆகியோரும் பயிற்சியாளரான ஆல்பர்ட் ரோகாவின் நம்பிக்கைக்குரிய ஆட்டக்காரர்கள். ஏற்கனவே ஒருமுறை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற சென்னை  அணி கோப்பையை வென்றிருக்கிறது. 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல சென்னையின் எப்சி அணியும், அறிமுக தொடரிலேயே கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க பெங்களூருவும் வரிந்துகட்டுகின்றன.சென்னை பெங்களூரு பலப்பரீட்சைதங்கக் கையுறை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 4 சீசனில் அதிக கோல்கள் விழாமல் தடுத்ததில் முதலிடத்தில் இருப்பவர் மும்பை அணியின் அமரிந்தர் சிங். இவர் 16 ஆட்டங்களில் 55 கோல் முயிற்சிகளை தடுத்துள்ளார். அடுத்த இடத்தில் உள்ள  சென்னை அணியின் கரன்ஜித் சிங் 19 ஆட்டங்களில் 49 கோல் முயற்சிகளை தடுத்துள்ளார்.  பெங்களூரு அணியின் குர்பிரீத் சிங் 18 ஆட்டங்களில் விளையாடி 44 கோல் முயற்சிகளை தடுத்து நிறுத்தியுள்ளார். இவர்களில் சிறந்த கோல்கீப்பருக்கான தங்கக் கையுறை விருதைப் பெற குர்பிரீத் சிங்குக்கே அதிக வாய்ப்புள்ளது. காரணம் பெங்களூர் அணிதான் இந்த சீசனில் குறைந்த கோல் வாங்கிய அணி. அதாவது 20 ஆட்டங்களில் 17 கோ மட்டுமே வாங்கியுள்ளது. இதில் 7 போட்டிகளில் குர்பிரீத் சிங் ஒரு கோல் கூட விழாமல் தடுத்துள்ளார்.

மூலக்கதை