புவனேஸ்வர் குமார், ஷமியை பின்பற்ற முயற்சி செய்கிறேன்: வேகப்பந்து வீச்சு சென்சேஷன் நாகர்கோட்டி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புவனேஸ்வர் குமார், ஷமியை பின்பற்ற முயற்சி செய்கிறேன்: வேகப்பந்து வீச்சு சென்சேஷன் நாகர்கோட்டி பேட்டி

மும்பை: இந்தியாவின் புதிய வேகப்பந்து வீச்சு சென்சேஷன் கமலேஸ் நாகர்கோட்டி. யு-19 உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்கியவர்களில் ஒருவர்.

யு-19 உலக கோப்பை தொடரில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடிய கமலேஸ் நாகர்கோட்டி 9 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய சீனியர் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோரை தான் பின்பற்ற முயல்வதாக கமலேஸ் நாகர்கோட்டி தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோரை மனதில் நினைத்து கொள்வேன். அவர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள்? என்பதை பார்த்து, அவர்களை பின்பற்ற முயல்கிறேன்.

ஆனால் அவர்களை நான் இன்னும் சந்தித்தது இல்லை. எனினும் வரும் நாட்களில், அவர்களுடன் சாட்டிங் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

தற்போது விஜய் ஹசாரே டிராபி ஒரு நாள் போட்டிகளிலும், அதன்பிறகு ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடுவதற்காக கவனம் செலுத்தி வருகிறேன்.

சூழ்நிலையை பொறுத்து பந்து வீச முயற்சி செய்வேன்’’ என்றார்.

யு-19 உலக கோப்பை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில்தான், ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலமும் நடைபெற்றது. அப்போது கமலேஸ் நாகர்கோட்டியின் பந்து வீச்சு திறன்கள் பல்வேறு அணிகளை ஈர்த்தன.

இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 3. 2 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. கமலேஸ் நாகர்கோட்டியுடன் இணைந்து யு-19 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய ஷிவம் மாவியும் இந்திய ஏ அணியில் இடத்தை கைப்பற்றுவதற்காக  ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக கூறியுள்ளார்.



வேகப்பந்து வீசக்கூடிய ஆல் ரவுண்டரான ஷிவம் மாவியையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவரும் யு-19 உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்களை வீழ்த்தினார்.

இது குறித்து ஷிவம் மாவி கூறுகையில், ‘’ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். நமது திறமையை வெளிப்படுத்த ஐபிஎல் தொடர் உதவும்.

இதன் மூலம் இந்தியா ஏ அல்லது இதர சீனியர் உள்நாட்டு தொடர்கள் என நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நிலையான அடிப்படையில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச வேண்டும் என்பதே எனது கனவு.

ஆனால் ஐபிஎல் தொடரில் வேகத்தை காட்டிலும் லைன் மற்றும் லென்த் ஆகிய அம்சங்களில்தான் அதிக கவனம் செலுத்த போகிறேன்’’ என்றார்.

கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகிய இருவருமே நிலையான அடிப்படையில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை