குளிர்கால ஒலிம்பிக் போட்டி: தென்கொரியாவில் இன்று தொடக்கம்: மாலை 4.30 மணிக்கு தொடக்க விழா

தமிழ் முரசு  தமிழ் முரசு
குளிர்கால ஒலிம்பிக் போட்டி: தென்கொரியாவில் இன்று தொடக்கம்: மாலை 4.30 மணிக்கு தொடக்க விழா

பியாங்சாங்: 92 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 4. 30 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது.

ஒலிம்பிக் போட்டி போல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய போட்டிகள் மட்டும் நடத்தப்படும்.

23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 25ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது.

ஐஸ் ஹாக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

தென்கொரியாவில் நடைபெறும் இந்த போட்டியில் அதன் எதிரி நாடான வடகொரியாவும் பங்கேற்கிறது.

தொடக்க விழாவில் இரு அணிகளும் இணைந்து அணிவகுத்து செல்ல இருப்பது சிறப்பம்சமாகும். ஐஸ் ஹாக்கியில் மகளிர் போட்டியில் இரு நாட்டு வீராங்கனைகளும் இணைந்து ஒரே அணியாக கொரியா என்ற பெயரில் களம் இறங்குகின்றனர்.

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல்முறையாகும்
தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று மாலை 4. 30 மணிக்கு நடக்கிறது. பியோங்ஹாங் ஒலிம்பிங் ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடக்கிறது.

இந்த அரங்கில் 35 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது.

தொடக்க விழா மட்டும் இந்த  ஸ்டேடியத்தில் நடக்கிறது.

வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பில் இந்தியா 62வது நாடாக வர உள்ளது. ஆனால் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்வது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் இருந்து ஷிவ கேசவன் பனிசறுக்கு போட்டியிலும், ஜெகதீஷ்சிங் கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் போட்டியிலும் கலந்து கொள்கின்றனர்.

ஷிவ கேசவன் 6வது முறையாக குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்க மருந்து பிரச்சினை காரணமாக ரியோ ஒலிம்பிக்கில் ரஷியா பெயரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருந்த ரஷிய அணியினருக்கு இந்த போட்டியிலும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 168 ரஷிய வீரர், வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் கீழ் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர்.



.

மூலக்கதை