தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்ற பொன்னான வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்ற பொன்னான வாய்ப்பு

போர்ட் எலிசபெத்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா இழந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இந்தியா வென்றது. ஆனால் 4வது போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் (டி/எல் விதிப்படி),  இந்தியா பரிதாபமாக தோல்வியடைந்தது.

எனினும் தொடரில் 3-1 என இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், 5வது ஒரு நாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ்ஸ் பார்க் மைதானத்தில், நாளை மாலை 4. 30 மணிக்கு நடைபெறுகிறது.

 இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, தொடக்க வீரர் ஷிகார் தவான் ஆகியோர் உச்சகட்ட பார்மில் உள்ளனர்.

நடப்பு தொடரில் இதுவரையிலான 4 போட்டிகளில் (4 இன்னிங்ஸ்), விராட் கோஹ்லி 393 ரன்களையும், ஷிகார் தவான் 271 ரன்களையும் விளாசியுள்ளனர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்களின் பங்களிப்புதான் சற்றே கவலையளிக்கும் விதமாக உள்ளது.

குறிப்பாக மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா பார்ம் இழந்து தடுமாறுகிறார். தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் ரோகித் சர்மாவால் சிறப்பாக விளையாட முடியாது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாகவே ரோகித் சர்மாவின் ஆட்டம் உள்ளது.

டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளில் (4 இன்னிங்ஸ்) 78 ரன்கள், ஒரு நாள் தொடரின் 4 போட்டிகளில் (4 இன்னிங்ஸ்) 40 ரன்கள் என 8 இன்னிங்ஸ்களில் மொத்தம் 118 ரன்களை மட்டுமே ரோகித் சர்மா எடுத்துள்ளார்.

அவருக்கு பின் விராட் கோஹ்லி, ஷிகார் தவான் கூட்டணி சிறப்பாக விளையாடி விடுவதால், இந்தியாவுக்கு பெரியளவில் பிரச்னை எழாமல் உள்ளது என்பதே நிதர்சனம்.

இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நன்றாக விளையாட வேண்டிய அவசியம் உள்ளது. மிடில் ஆர்டரில் முக்கியமான வீரரான ரஹானே 4 போட்டிகளில் (3 இன்னிங்ஸ்) 98 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

அதாவது முதல் போட்டியில் 79 ரன்களை விளாசிய பின் அவர் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடவில்லை. டோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 4 போட்டிகளில் (3 இன்னிங்ஸ்) முறையே 56, 26 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.

ஆனால் டோனி 2 போட்டிகளில் நாட் அவுட் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே டோனி குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.

4வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 35. 2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் என மிக வலுவாக  இருந்தது. இதனால் 330-340 ரன்கள் வரை இந்தியா விளாசும் என எதிர்பார்க்கப்பட்டது.



ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போதிய பங்களிப்பை வழங்காததால், 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே விராட் கோஹ்லி, ஷிகார் தவானை மட்டுமே சார்ந்திராமல், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.    பந்து வீச்சு துறையை பொறுத்தவரை, எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர்.

குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், சஹால் விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். நடப்பு தொடரில் இதுவரையிலான 4 போட்டிகளில் குல்தீப் யாதவ் (12 விக்கெட்கள்), சஹால் (12 விக்கெட்கள்) இருவரும் இணைந்து 24 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

ஆனால் முதல் 3 போட்டிகளில் கட்டுக்கோப்பாக பந்து வீசியதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்களையும் வீழ்த்தி அசத்திய குல்தீப் யாதவ்-சஹால் கூட்டணி, 4வது போட்டியில் ரன் வள்ளல்களாக உருவெடுத்தது.

குல்தீப் யாதவ் 6 ஓவர்களில் 51 ரன்களையும் (எகானமி 8. 50), சஹால் 5. 3 ஓவர்களில் 68 ரன்களையும் (எகானமி 12. 36) வாரி வழங்கினர்.

மழை பெய்ததால், பந்தை அவர்களால் அதிகம் சுழற்ற முடியவில்லை என இதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. எனவே 5வது போட்டியில் ரிஸ்ட் ஸ்பின் கூட்டணி மீண்டும் அசத்தும் என நம்பலாம்.

இவர்களுடன் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவர் 4 போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நடப்பு தொடரில் அவரது சராசரி எகானமி 4. 48 என சிறப்பாகவே உள்ளது. புவனேஸ்வர் குமார் மட்டும் விக்கெட் வீழ்த்த தடுமாறுவதுடன் ரன்களையும் சற்று அதிகமாகவே வழங்கி விடுகிறார்.

‘ஸ்விங் கிங்’ என பெயரெடுத்துள்ள புவனேஸ்வர் குமாரும் குல்தீப் யாதவ்-சஹால் கூட்டணியுடன் ‘பார்ட்டியில்’ கலந்து கொண்டால், தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
 தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த தென் ஆப்ரிக்க அணிக்கு 4வது போட்டியில் கிடைத்த வெற்றியும், டி வில்லியர்ஸின் வருகையும் புத்துணர்ச்சி அளித்திருக்கும்.



4வது போட்டியில் ‘கில்லர்’ மில்லர்,  ஹெய்ன்ரிச் கிளாசன், பெலுக்வாயோ ஆகியோர் அதிரடியில் மிரட்டினர். டூ பிளஸிஸ், டி காக் உள்ளிட்ட தென் ஆப்ரிக்க முன்னணி வீரர்கள் காயத்தால் விலகியதால், உப்பு சப்பின்றி போயிருந்த ஒரு நாள் தொடர் தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


 தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியா இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்றதில்லை என்ற மோசமான வரலாறு உள்ளது. டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்து விட்டதால், அடுத்த சுற்றுப்பயணம் வரை இனி அதைப்பற்றி யோசிக்க முடியாது.

தற்போது ஒரு நாள் தொடரை முதல் முறையாக கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேட்ச்களை தவற விடுவது, தேவையில்லாத உதிரிகளை வீசுவது ஆகிய தவறுகளை திருத்தி கொண்டால், கோஹ்லியின் படையால் புதிய வரலாறு படைக்க முடியும்.

6வது மற்றும் கடைசி போட்டி இருந்தாலும் கூட, நாளைய போட்டியில் வென்று தொடரை வெல்வதை உறுதி செய்ய கோஹ்லி படை போராடும் என எதிர்பார்க்கலாம். தென் ஆப்ரிக்க அணியை பொறுத்தவரை நாளைய போட்டி வாழ்வா? சாவா? போன்றது.

சொந்த மண்ணில் தொடரை இழக்க தென் ஆப்ரிக்கா விரும்பாது. அடிபட்ட புலியாக உள்ள தென் ஆப்ரிக்காவும் கடும் சவால் அளிக்கும் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.

 

கென்யாவுக்கு எதிராகவும் தோல்வி
* போர்ட் எலிசபெத் செயின்ட் ஜார்ஜ்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 4, கென்யாவுக்கு எதிராக 1 என மொத்தம் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவை அனைத்திலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது.

ஒன்றில் கூட வென்றதில்லை.
*  இந்த மைதானத்தில் விளாசப்பட்ட அதிகபட்ச டோட்டல் 335/6.

2002ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் இந்த டோட்டலை பதிவு செய்தது. குறைந்தபட்ச டோட்டல் 112.

2003ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து இந்த ஸ்கோரை பதிவு செய்தது.

பாரம்பரிய வரவேற்பு
5வது ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி போர்ட் எலிசபெத் சென்றடைந்துள்ளது.

வானவில் தேசமான தென் ஆப்ரிக்காவின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் அங்கு இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென் ஆப்ரிக்க ஹீரோவுக்கே பிங்க் போட்டிக்கு டிக்கெட் இல்லை!
போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்காவின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் காயம் அடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில், அறிமுக விக்கெட் கீப்பர் ஹெய்ன்ரிச் கிளாசன் சேர்க்கப்பட்டார்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் போட்டியாக நடத்தப்பட்ட 4வது ஒரு நாள் போட்டியில், ஹெய்ன்ரிச் கிளாசன் ஆட்டமிழக்காமல் விளாசிய 43 ரன்களின் (27 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்சர்) மூலம்தான் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதனால் அவருக்கே ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.



ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பிங்க் போட்டியை பார்ப்பதற்காக தனது குடும்பத்திற்கான டிக்கெட்களையே தன்னால் வாங்க முடியாத சூழல் நிலவியது என்ற தகவலை ஹெய்ன்ரிச் கிளாசன் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்பின் அணியில் இடம் கிடைத்ததால், சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்துள்ளார் ஹெய்ன்ரிச் கிளாசன்.

டிக்கெட் கூட வாங்க முடியாத சூழல் நிலவிய ஒரு போட்டியில், அவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இந்த போட்டியில் மைதானம் முழுவதும் பிங்க் மயமாக இருந்ததும் குறிப்பிடத்கக்கது.


.

மூலக்கதை