மூதாட்டியின் வீட்டை கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்திய கொள்ளையர்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மூதாட்டியின் வீட்டை கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்திய கொள்ளையர்கள்!!

மூதாட்டி ஒருவரை வீட்டுக்குள் அடைத்து வைத்து, கொள்ளையர்கள் அவரது வீட்டினை கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் எதேச்சையாக தெரியவந்துள்ளது. Essonne இன் Grande-Borne நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் குழாய் பிரச்சனை ஒன்று ஏற்பட, அங்கு வசிப்பவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தை ஆராய்ந்த தீயணைப்பு படையினர், கட்டிடத்திக் மேல் தளத்தில் இருந்து தண்ணீர் ஒழுக்கு ஏற்படுகிறது என கண்டுபிடித்தனர். 
 
பின்னர், அக்கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை திறக்க கோரி பலமுறை கேட்டும் திறக்கப்படாமையால், ஜன்னல் வழியாக உள் நுழைய தீயணைப்பு படையினர் முயன்றனர். உள்நுழைந்த அதிகாரிகளுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. 
 
வீட்டின் உள்ளே அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்ட 85 வயதுடைய பெண்மணி மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், அந்த வீட்டினை கடத்தல்காரர்கள் கடந்த ஆறு மாதங்களாக அவ்வீட்டினை 'வைப்பகமாக' பயன்படுத்தி வந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கடத்தல் காரர்கள் தாதியர் வேடமணிந்து வீட்டுக்கு வந்து செல்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
தொடர்ந்து வீட்டில் 10 கிலோ எடையுள்ள கஞ்சா பொருட்களும், 20,000 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளது. மூதாட்டி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
 

மூலக்கதை