இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடர்களை ஆஸ்திரேலியா கைப்பற்றும்: கிரெய்க் மெக்டெர்மோட் கணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடர்களை ஆஸ்திரேலியா கைப்பற்றும்: கிரெய்க் மெக்டெர்மோட் கணிப்பு

மெல்போர்ன்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இன்று ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

காலில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருப்பதால் மிட்செல் ஸ்டார்க்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் காயம் அடைந்ததால், ஜோஸ் ஹேசல்வுட்டும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரெய்க் மெக்டெர்மோட் கூறுகையில், ‘’மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் இல்லாததால், ஆஸ்திரேலிய அணியின் வேகம் குறையும். எனினும் அணியில் இடம் பிடித்துள்ள நாதன் கோல்டர் நைல், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் உடையவர்கள் என நான் நம்புகிறேன்.

அது தவிர ஜேம்ஸ் பால்க்னரும் உள்ளார். 2015ம் ஆண்டு உலக கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்ற அவர் முக்கிய பங்காற்றினார்.

குறுகிய வகை போட்டிகளில் கடந்த காலங்களில் அவர் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்படுவது கூடுதல் பலம்.

இருந்தாலும் மிட்செல் ஸ்டார்க் இல்லாதது டெத் ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஒரு நாள் தொடரை 3-2 எனவும், டி20 தொடரை 2-1 எனவும் ஆஸ்திரேலியா கைப்பற்றும் என கருதுகிறேன்’’ என்றார்.


 
250 முதல் டிக்கெட்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒரு நாள் போட்டி வரும் 24ம் தேதி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்கள் 250 முதல் 5,120 வரை விற்பனை செய்யப்படும் என மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் (எம்பிசிஏ) அறிவித்துள்ளது.

ஹோல்கர் மைதானத்தில் 28,500 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை