யு.எஸ். ஓபன் டென்னிஸ் ரபேல் நடால் சாம்பியன்: 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
யு.எஸ். ஓபன் டென்னிஸ் ரபேல் நடால் சாம்பியன்: 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தல்

நியூயார்க்: ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யு. எஸ். ஓபன் என ஆண்டுதோறும் 4 கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு. எஸ். ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை அரங்கேறியது.

உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால்-தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் பலப்பரீட்சை நடத்தினர். போட்டி முழுவதும் கெவின் ஆண்டர்சனை அழுத்தத்தின் கீழே வைத்திருந்த ரபேல் நடால், 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், மிக எளிதாக வெற்றி பெற்றார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டி ‘ஒன் சைட்’ஆக அமைந்தது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ரபேல் நடால், இந்திய மதிப்பில் சுமார் ₹24 ேகாடியை பரிசாக வென்றார்.



யு. எஸ். ஓபனில் ரபேல் நடால் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2017ம் ஆண்டில் ரபேல் நடால் வென்ற 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

கடந்த மே, ஜுன் மாதங்களில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனிலும் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். 31 வயதாகும் ரபேல் நடால், 2013ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக, ஒரே ஆண்டில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக ரபேல் நடால் வென்ற 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. பரிசளிப்பு விழாவின்போது மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் காணப்பட்ட ரபேல் நடால், ‘’இந்த ஆண்டு என்ன நடந்தது? நம்ப முடியாத வகையில் அமைந்துள்ளது’’ என்றார்.

இந்த ஆண்டிற்கான 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களும் முடிந்து விட்டன.

மேஜர் டைட்டில்ஸ் என கருதப்படும் இதில், ஆண்கள் பிரிவில் ரபேல் நடால் (பிரெஞ்சு ஓபன், யு. எஸ். ஓபன்), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், ஜுலையில் நடைபெற்ற விம்பிள்டன்) ஆகியோர் தலா 2 பட்டங்களை கைப்பற்றியுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளில் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் ரோஜர் பெடரர். அவர் 19 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

அவரை விட ரபேல் நடால் 3 பட்டங்கள் மட்டுமே பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை