நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் 42 பந்துகளில் சதம்; அப்ரிடி மிரட்டல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் 42 பந்துகளில் சதம்; அப்ரிடி மிரட்டல்

டெர்பி: நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. டெர்பி-யில் நடந்த முதல் கால் இறுதி போட்டியில், ஹாம்ப்ஷையர்-டெர்பிஷையர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெர்பிஷையர் கேப்டன் கேரி வில்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் களமிறங்கிய ஹாம்ப்ஷையர் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 101 ரன்கள் (43 பந்துகள், 10 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். சதம் விளாச அவருக்கு 42 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது.

இதன்பின் களமிறங்கிய டெர்பிஷையர் 19. 5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் ஹாம்ப்ஷையர் அபார வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது வென்ற ஷாகித் அப்ரிடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 கிரிக்கெட் உலகில் அதிரடி வீரராக கருதப்படுபவர் ஷாகித் அப்ரிடி.

ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசியவர் என்ற சாதனை ஷாகித் அப்ரிடியிடம்தான் இருந்தது. 1996ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நைரோபியில் நடந்த போட்டியில் ஷாகித் அப்ரிடி வெறும் 37 பந்துகளில் சதம் கடந்தார்.

அதுதான் ஷாகித் அப்ரிடி விளையாடிய முதல் இன்னிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.   ஷாகிப் அப்ரிடியின் முதல் போட்டி கென்யாவுக்கு எதிரானது என்றாலும் கூட, அந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட நாட்களாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த சாதனையை நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் 2014ம் ஆண்டு தகர்த்தார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக குயின்ஸ்டவுனில் நடந்த போட்டியில் கோரி ஆண்டர்சன் வெறும் 36 பந்துகளில் சதம் கடந்தார். ஓராண்டுக்கு பிறகு (2015ம் ஆண்டு) தென் ஆப்ரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் இந்த சாதனையை தனதாக்கி கொண்டார்.

ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் வெறும் 31 பந்துகளில் சதம் விளாசினார்.

.

மூலக்கதை