வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட்: குக், ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து ரன் குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட்: குக், ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து ரன் குவிப்பு

பர்மிங்காம்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே முதல் டெஸ்ட் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.

பகலிரவு டெஸ்ட் போட்டியான இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் அறிமுக வீரராக களம் இறங்கிய மார்க் ஸ்டோன்மேன், டாம் வெஸ்ட்லி ஆகியோர் தலா 8 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

39 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில், முன்னாள் கேப்டன் அலஸ்டெய்ர் குக், கேப்டன் ஜோ ரூட் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய ரூட் 139 பந்துகளில் சதம் விளாசினார்.

டெஸ்ட் போட்டிகளில் இது அவருக்கு 13வது சதமாகும். மறுபுறம் நிதானமாக ஆடிய குக் 182 பந்துகளில் சதம் அடித்தார்.   இதன்மூலம் அவரின் டெஸ்ட் சத எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.

அணியின் ஸ்கோர் 287 ரன்னாக உயர்ந்த போது ஜோ ரூட் 136 ரன்னில் ரோச் பந்தில் போல்டானார்.

இருவரும் இணைந்து 3வது விக்கெட்டிற்கு 248 ரன் குவித்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 348 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

குக் 153, மலன் 28 ரன்னில் களத்தில் உள்ளனர். வெ. இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 2,கம்மின்ஸ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

.

மூலக்கதை