இலங்கையுடன் 3வது டெஸ்ட் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 329 ரன் குவிப்பு

தினகரன்  தினகரன்

பல்லெகெலே : இலங்கை அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 119 ரன், லோகேஷ் ராகுல் 85 ரன் விளாசினர். இந்தியா - இலங்கை அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் 2 டெஸ்டிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு பதிலாக, இளம் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.இலங்கை அணியில் ஹெராத், பிரதீப், டி சில்வாவுக்கு பதிலாக சந்தகன், குமாரா, பெர்னாண்டோ இடம் பெற்றனர் டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ஷிகர் தவான், கே.எல்.ராகுல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 188 ரன் சேர்த்து அசத்தினர். ராகுல் 85 ரன் எடுத்து (135 பந்து, 8 பவுண்டரி) புஷ்பகுமாரா பந்துவீச்சில் கருண்ரத்னே வசம் பிடிபட்டார். பொறுப்புடன் விளையாடி சதத்தை நிறைவு செய்த தவான், 119 ரன் எடுத்து (123 பந்து, 17 பவுண்டரி) புஷ்பகுமாரா பந்துவீச்சில் சண்டிமால் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 8 ரன்னில் வெளியேற இந்தியா 229 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சற்று தடுமாறியது. ரகானே 17 ரன் எடுத்து புஷ்பகுமாரா சுழலில் கிளீன் போல்டானார். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் கோஹ்லி 42 ரன் எடுத்து (84 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய அஷ்வின் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 90 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன் குவித்துள்ளது. விருத்திமான் சாஹா 13, ஹர்திக் பாண்டியா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் புஷ்பகுமாரா 3, சந்தகன் 2, பெர்னாண்டோ 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.* லோகேஷ் ராகுல் தொடர்ச்சியாக 7வது அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.  வீக்ஸ், ஆண்டி பிளவர், சந்தர்பால், சங்கக்கரா, ரோஜர்ஸ் சாதனையை அவர் சமன்  செய்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.* முதல் விக்கெட்டுக்கு தவான் - ராகுல் ஜோடி 188 ரன் சேர்த்த நிலையில், மேற்கொண்டு 134 ரன்னுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 1993ல் கொழும்புவில் நடந்த டெஸ்டில் பிரபாகர் - சித்து ஜோடி முதல் விக்கெட்டுக்கு 171 ரன் சேர்த்து படைத்த சாதனையை தவான் - ராகுல் ஜோடி முறியடித்தது.* கடந்த 2011ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ராகுல் டிராவிட் 2 சதம் அடித்திருந்தார். அதன் பிறகு நடந்த வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தற்போது தவான் 2 சதம் அடித்திருக்கிறார். அவர் ஒரு தொடரில் 2 சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

மூலக்கதை