வலுவான இலக்கை நோக்கி இந்தியா!

PARIS TAMIL  PARIS TAMIL
வலுவான இலக்கை நோக்கி இந்தியா!

இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் தடுமாறினாலும் வலுவான இலக்கை நோக்கி இந்திய அணி நகர்ந்துள்ளது.
 
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தனது ஆதிக்கம் செலுத்திவருகின்றது இந்திய அணி.
 
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் முதல் நாள் ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 344 ஓட்டங்களைப்பெற்று வலுவான இலக்கை நோக்கி நகர்ந்துள்ளது.
 
முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, 133 ஓட்டங்களை எடுத்திருந்தபோது முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.
 
ஆனாலும், இந்திய அணியின் மத்திவரிசை துடுப்பாட்ட வீரர்களாக இணைந்த புஜாரா மற்றும் ரஹானே ஜோடி வீழ்த்தப்படாத இணைப்பாட்டமாக 211 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
 
ஷிகர் தவான் 35 ஓட்டங்களையும் ராகுல் 57 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, நம்பிக்கை தருவாரென எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணித்தலைவர் விராட் கோலி 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
 
புஜாரா தனது 13 ஆவது டெஸ்ட் சதத்தையும், ரஹானே தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தனர்.
 
இதேவேளை, 17.4 ஓவர்கள் பந்துவீசிய நுவன் பிரதீப் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக களத்தைவிட்டு வெளியேறினார். அவரது உடற்தகுதி குறித்து இன்று காலையே தீர்மானிக்க முடியும் என இலங்கை அணியின் பயிற்றுநரான நிக்கி போதாஸ் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் புஜாரா 128 ஓட்டங்களுடனும் ரஹானே 103 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்திலுள்ளனர்.

மூலக்கதை