வெளிநாடுகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டால் உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக விராட் கோஹ்லி மதிப்பிடப்படுவார்: கங்குலி கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெளிநாடுகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டால் உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக விராட் கோஹ்லி மதிப்பிடப்படுவார்: கங்குலி கருத்து

கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

இதன் மூலம் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்றிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை கோஹ்லி சமன் செய்துள்ளார். ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ், 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி வரிசையாக 9 டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தது.

இதேபோல் 1884ம் ஆண்டு முதல் 1892ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியும் கூட தொடர்ச்சியாக 9 தொடர்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன்கள் மாற்றப்பட்டனர்.

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரே கேப்டனின் தலைமையின் கீழ் இந்த சாதனையை படைத்துள்ளன.

இன்னும் ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றினால், விராட் கோஹ்லி உலக சாதனை படைக்கலாம்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்று 3 டெஸ்ட், 6 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இதன் முதல் டெஸ்ட், ஜனவரி 5ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. இந்த தொடர்தான் இந்தியாவின் உண்மையான திறனை பரிசோதித்து பார்க்கப்போகிறது என முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கருதுகின்றனர்.


 இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில், ‘’டெஸ்ட் கிரிக்கெட்டில், உலகின் தலை சிறந்த அணியாக விளங்க கூடிய திறன் கோஹ்லியின் இந்திய அணியிடம் உள்ளது. கோஹ்லி அற்புதமான கிரிக்கெட் வீரர்.

நல்ல தலைவர். ஆனால் கடந்த காலங்களில் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியாவின் நிலையை இந்தியா இன்னும் எட்டவில்லை.



கோஹ்லி தலைமையின் கீழ், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா இன்னும் செல்லவில்லை. விரைவில் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

அங்கே இந்தியாவால் வெற்றி பெற முடியும் என நான் நம்புகிறேன். உள்நாடு, வெளிநாடு என ஒரு முழு வட்டத்தையும் முடித்த பின்னரே முழுமையாக மதிப்பிட முடியும்.

இந்திய அணி தற்போதைய நிலையில், சொந்த மண் போட்டிகளை மட்டும் நிறைவு செய்துள்ளது. இந்த 9 தொடர் வெற்றியில், 90 சதவீத கிரிக்கெட்டை அவர்கள் சொந்த மண்ணில்தான் விளையாடியிருப்பதாக நினைக்கிறேன்.

வெளிநாட்டு தொடர்களில் இந்தியா சிறப்பாக செயல்பட்டால், உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கோஹ்லி மதிப்பிடப்படுவார்’’ என்றார்.


.

மூலக்கதை