பாகிஸ்தானுடன் விளையாட மறுப்பு: பிசிசிஐயிடம் இழப்பீடு பெற ஜனவரியில் நடவடிக்கை: பிசிபி தலைவர் நஜிம்சேத்தி பேட்டி

தினகரன்  தினகரன்

லாகூர்: பாகிஸ்தானுடன் விளையாட மறுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இழப்பீடு வழங்கக்கோருவது தொடர்பாக ஐசிசியிடம் வரும் ஜனவரி மாதம் முறைப்படி கோரிக்கை வைக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாலும், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாலும் அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாட இந்தியா மறுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐசிசி மூலம் இந்தியாவுக்கு எதிரான தொடர்களை நடத்த முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இழப்பீடு பெற அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேத்தி அளித்துள்ள பேட்டியில், பிசிசிஐயிடம் இருந்து இழப்பீடு பெறுவது தொடர்பாக அடுத்த வாரம் லண்டனில் சட்ட ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்படும். அதன்பின்னர் ஜனவரி முதல் வாரத்தில், பிசிசிஐயிடம் இழப்பீடு பெற்று தருமாறு முறைப்படி ஐசிசியிடம் கோரிக்கை வைக்கப்படும். பிசிசிஐயுடன் நல்லுறவு தொடர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். கிரிக்கெட் தொடர்களை நடத்தினால் இரு நாட்டு நட்புணர்வு வலுப்பெறுவதுடன் வருவாயும் அதிகமாக கிடைக்கும். ஆனால் அவர்கள் விளையாட விரும்பவில்லை என்பதால் இழப்பீடு பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால் எதிர்காலத்தில் ஐசிசி தொடர்களில் சில விளைவுகள் ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுடன் நாங்கள் விளையாடுவதில் எந்த வித பிரச்னையும் இல்லை. இந்தியா விளையாட வில்லை என்றால் அவர்களுக்கு தான் இழப்பு. தரவரிசையில் புள்ளிகளையும் இழக்க வேண்டி இருக்கும், என்றார்.

மூலக்கதை