நீண்ட நாள் கனவு நனவானது...

தினகரன்  தினகரன்

இந்தூர் : இலங்கை அணியுடன் நடந்து வரும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் கூறியுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், தொடக்க வீரர் ஷிகர் தவான் இருவரும் சொந்த காரணங்களுக்காக நாக்பூரில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள 2வது டெஸ்டில் விளையாட மாட்டார்கள் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. புவனேஷ்வர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதால் எஞ்சியுள்ள 2 டெஸ்டிலும் பங்கேற்க மாட்டார். தவான் 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறுவார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக தமிழக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் (26 வயது) சேர்க்கப்பட்டுள்ளார். நாக்பூர் டெஸ்டில் தொடக்க வீரர் முரளி விஜய், அனுபவ வேகம் இஷாந்த் ஷர்மா களமிறங்குவதற்கே அதிக வாய்ப்பு இருந்தாலும், இந்திய அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது குறித்து விஜய் ஷங்கர் நேற்று கூறியதாவது: இந்த திடீர் வாய்ப்பு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. மிகவும் பெருமையாக உணர்கிறேன். நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளது. இந்தியா ஏ அணியில் விளையாடிய அனுபவம் ஒரு ஆல் ரவுண்டராக என்னை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவியது. நடப்பு ரஞ்சி சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்டிங்கில் நல்ல பார்மில் இருப்பதுடன், பந்துவீச்சிலும் முடிந்த அளவுக்கு பங்களித்து வருகிறேன்.காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனது விரக்தியளித்தது. தற்போது உடல்தகுதியை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். பயிற்சியாளர் எல்.பாலாஜியின் ஆலோசனைகள் எனது பந்துவீச்சை மேம்படுத்தவும், வேகத்தை அதிகரிக்கவும் உதவின. இந்திய அணியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக பங்களிக்க முயற்சிப்பேன். இவ்வாறு விஜய் ஷங்கர் கூறியுள்ளார். இவரது தலைமையிலான தமிழக அணி கடந்த சீசனில் தியோதர் டிராபி மற்றும் சையது முஷ்டாக் அலி டிராபியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. சகோதரர் அஜய் டிஎன்சிஏ லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

மூலக்கதை