என்னை ஜெயிக்க விடாமல் சதி... தேசிய பைக் சாம்பியன் ரஜினி புகார்

தினகரன்  தினகரன்

சென்னை : தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில்   தொடர்ந்து 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்  ரஜினி கிருஷ்ணன், 10வது முறையாக தான் பட்டம் வெல்வதை தடுப்பதற்காக மோட்டார் சைக்கிளை நாசம் செய்தததாக புகார் கூறியுள்ளார். சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்தவர்  ரஜினி கிருஷ்ணன். மோட்டர் சைக்கிள் பந்தய வீரர். வெளிநாடுகளில் நடைப்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் வென்ற முதல் இந்திய வீரர். மலேசியவில் 2015ம் ஆண்டு நடைபெற்ற 1000சிசி ஓபன் பிரிவில் முதலிடம் பெற்றவர். கத்தாரில் நடைப்பெற்ற போட்டியிலும் சாம்பியன். இப்படி பல்வேறு போட்டிகளில் ஆசிய, உலக அளவில் வென்றுள்ளார். மேலும், தேசிய அளவில் 1000சிசி பந்தய பிரிவில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக பட்டம் பெற்றவர்.   இந்த ஆண்டு 10வது முறையாக களம் இறங்கியபோது, அவரது வெற்றியை தடுப்பதற்காக பைக் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, ரஜினி கிருஷ்ணன் சென்னையில் நேற்று கூறியதாவது: சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன் நான். ஸ்பான்சர்களின் உதவியுடன்   டெல்லி கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டேர்நேஷனல் திடலில்  18, 19 தேதிகளில் நடைபெற்ற ஜேகே ரேசிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க சென்றிருந்தேன். எனது கவாசகி பைக்கை  போட்டி நடைபெறும் திடலில் 17ம் தேதி இரவு நிறுத்தியிருந்தேன். மறுநாள் போட்டியில் பங்கேற்றபோது பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. கடும் முயற்சிக்கு பிறகு ஓட்டிய போதும் பைக் வேகமாக செல்லவில்லை. அதனால் போட்டியில் பாதியில் வெளியேறினேன். பிறகு பைக்கை சோதனை செய்தபோது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தனர். வேகத்தை தடுக்கும் வகையில் நிறைய மாற்றங்களை செய்திருந்தனர். தொடர்ந்து ஓட்டியிருந்தால் தோற்பது மட்டுமல்ல பெரும் விபத்து நிகழ்ந்திருக்கும். ஒரு தென்னிந்தியர் அதுவும் தமிழர் தொடர்ந்து வெற்றி பெறுவதை பொறுக்காமல் இப்படி செய்துள்ளனர். இந்த சதி குறித்து  இந்திய மோட்டர் சைக்கிள் விளையாட்டு சங்கத்தில் புகார் அளித்துள்ளோம்.

மூலக்கதை