இலங்கை 294 ரன் குவித்து ஆல் அவுட் 2வது இன்னிங்சில் இந்தியா பதிலடி

தினகரன்  தினகரன்

கொல்கத்தா : இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்துள்ளது. முன்னதாக, இலங்கை முதல் இன்னிங்சில் 294 ரன் குவித்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசிய நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா அதிகபட்சமாக 52 ரன் எடுத்தார். இலங்கை பந்துவீச்சில் லக்மல் 4, கமகே, ஷனகா, பெரேரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முதல் 2 நாள் ஆட்டமும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்திருந்தது. திரிமன்னே 51 ரன், மேத்யூஸ் 52 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். கேப்டன் சண்டிமால் 13, டிக்வெல்லா 14 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 62 ரன் சேர்த்தது.டிக்வெல்லா 35 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கோஹ்லியிட,ம் பிடிபட்டார். அடுத்து வந்த ஷனகா டக் அவுட்டாக, சண்டிமால் 28 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் என வலுவான நிலையில் இருந்த இலங்கை, 201/7 என திடீர் சரிவை சந்தித்தது. தில்ருவன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இலங்கை விரைவில் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹெராத் - லக்மல் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தது. ஹெராத் 67 ரன் (105 பந்து, 9 பவுண்டரி), லக்மல் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன் குவித்து ஆல் அவுட்டானது (83.4 ஓவர்).இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி தலா 4, உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினர். அனைத்து விக்கெட்டையும் வேகப் பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர். முன்னணி ஸ்பின்னர்கள் அஷ்வின் 8 ஓவர், ஜடேஜா 1 ஓவ1 மட்டுமே வீசினர். இதைத் தொடர்ந்து, 122 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல் - ஷிகர் தவான் ஜோடி பொறுப்புடன் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் விளாசினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவான் 94 ரன் எடுத்து (116 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஷனகா பந்துவீச்சில் டிக்வெல்லா வசம் பிடிபட்டார். நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்துள்ளது. ராகுல் 73 ரன், புஜாரா 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை