யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் ஆப்கானிஸ்தான் சாம்பியன்

தினகரன்  தினகரன்

கோலாலம்பூர் : யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில், பாகிஸ்தான் அணியை 185 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. மலேசியாவில் நடைபெற்று வந்த இந்த தொடரின் பரபரப்பான இறுதி போட்டியில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. டாசில் வென்ற பாகிஸ்தான் யு-19 அணி முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. இக்ரம் பைஸி (17 வயது) ஆட்டமிழக்காமல் 107 ரன் (113 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். தொடக்க வீரர்கள் ரகுமான் குல் 40, இப்ராகிம் ஸத்ரன் 36 ரன் எடுத்தனர். அடுத்து 50 ஓவரில் 249 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முஜீப் ஸத்ரன் (16 வயது) சுழலை சமாளிக்க முடியாமல் 22.1 ஓவரிலேயே வெறும் 63 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முஜீப் 7.1 ஓவரில் 2 மெய்டன் உட்பட 13 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். குவாயிஸ் அகமது 3, வாபதார் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் அணி 185 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று ஆசிய கோப்பையை முதல் முறையாக முத்தமிட்டது. அந்த அணியின் இக்ரம் பைஸி ஆட்ட நாயகன் விருதும், முஜீப் ஸத்ரன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற வலுவான அணிகளின் சவாலை முறியடித்து ஆப்கன். அணி ஆசிய சாம்பியனாகி அசத்தியுள்ளது.

மூலக்கதை