உலக கோப்பைக்கு தகுதி பெறாததால் இத்தாலி கால்பந்து அணி பயிற்சியாளர் அதிரடியாக நீக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பைக்கு தகுதி பெறாததால் இத்தாலி கால்பந்து அணி பயிற்சியாளர் அதிரடியாக நீக்கம்

ரோம்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடர், 2018ம் ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதில், விளையாடும் அணிகள் தகுதி சுற்றின் மூலம் ேதர்வு செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஸ்வீடன் அணிக்கு எதிரான பிளே ஆப் போட்டியில், 1-0 என்ற ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில், இத்தாலி தோல்வியடைந்தது. இதனால் 60 ஆண்டுகளில், அதாவது 1958ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக உலக கோப்பைக்கு முன்னேறும் வாய்ப்பை இத்தாலி இழந்தது.

உலக கோப்ைபயில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தங்கள் அணி, உலக கோப்பைக்கு முன்னேற கூட முடியாமல் போனதால், இத்தாலி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனால் பயிற்சியாளர் ஜியன் பியாரோ வென்டுராவின் யுக்திகள், அணி தேர்வு ஆகியவை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் ராஜினாமா செய்ய மாட்டேன் என ஜியன் பியாரோ வென்டுரா அறிவித்தார். எனினும் தோல்வி குறித்து விவாதிக்க இத்தாலி கால்பந்து கூட்டமைப்பின் கூட்டம் தலைநகர் ரோமில் கூடியது.

இதில், ஜியன் பியாரோ வென்டுராவை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்குவது என அதிரடியாக முடிவு செய்யப்பட்டது. இத்தாலி அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தவர் அன்டோனியா கோண்டே.

அவருக்கு பதிலாக, கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் ஜியன் பியாரோ வென்டுரா இத்தாலி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அப்போது ஜியன் பியாரோ வென்டுராவுடன் 2 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதாவது 2018 உலக கோப்பை முடிவடையும் வரை அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில்தான் அவரது ஒப்பந்தம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2020ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால் ஜியன் பியாரோ வென்டுராவின் பதவிக்காலம் வெறும் 17 மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது. 69 வயதாகும் ஜியன் பியாரோ வென்டுரா இத்தாலியை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் புதிய பயிற்சியாளர் பெயர் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. எனினும் கார்லோ அன்சிலோட்டியுடன் இத்தாலி கால்பந்து கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஜியன் பியாரோ வென்டுராவின் இடத்தை கார்லோ அன்சிலோட்டி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 58 வயதாகும் இவர் இத்தாலி அணிக்காக விளையாடியவர்.

கிளப் அளவில் மிகவும் திறமைசாலி என பெயரெடுத்தவர்.

ஜெர்மன் கிளப்பான பேயர்ன் முனிச் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர்.

எனினும் கடந்த செப்டம்பர் மாதம் பேயர்ன் முனிச் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிமீயர் லீக் கிளப்பான செல்சாவின் தற்போதைய பயிற்சியாளராக உள்ள அன்டோனியா கோண்டே, ரஷ்யாவின் ஜெனிட் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கிளப்பின் பயிற்சியாளராக உள்ள ராபர்ட்டோ மேன்சினி, ஜூவெண்டஸ் கிளப்பின் பயிற்சியாளர் மாசிமில்லனோ அலெக்ரி ஆகியோரின் பெயர்களும், இத்தாலி அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு அடிபட்டு வருகிறது.

இத்தாலி அணி அடுத்ததாக, மார்ச் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை