மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
மக்காவுக்கு எதிராக 41 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா

பெங்களூரு: ஆசிய கோப்பை கால்பந்து தொடர், 2019ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்ற தகுதி சுற்று போட்டி ஒன்றில், இந்தியா-மக்காவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

28வது நிமிடத்தில் ரவ்லின் போர்ஜெஸ், 60வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி, 90+2வது நிமிடத்தில் ஜிஜே ஆகியோர் இந்திய அணிக்கு கோல் அடித்தனர். இதில், ஜிஜே அடித்த கோலுக்கும், கேப்டன் சுனில் சேத்ரி உதவி செய்தார்.

இது தவிர, மக்காவ் வீரர் லாம் செங், 70வது நிமிடத்தில் சுய கோல் ஒன்றையும் அடித்தார். மக்காவ் அணிக்கு 37வது நிமிடத்தில் நிக்கோலஸ் டார்ரோ மட்டும் ஒரு கோல் அடித்தார்.


 
தகுதி சுற்றின் ‘ஏ’ பிரிவில், இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தியாவுடன், மியான்மர், கிர்கிஸ்தான், மக்காவ் ஆகிய அணிகளும் ‘ஏ’ பிரிவில் உள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்தியா தனது முதல் மூன்று போட்டிகளில், மியான்மரை 1-0, கிர்கிஸ்தானை 1-0, மக்காவ்வை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

தற்போது மக்காவுக்கு எதிரான 2வது போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், தகுதி சுற்று போட்டிகளில், இந்தியா தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.

நவம்பர் 24ம் தேதி மியான்மருடனும், அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி கிர்கிஸ்தானுடனும், இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

தகுதி சுற்று ‘ஏ’ பிரிவில், இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இதன்மூலம் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தற்போதே இந்தியா தகுதி பெற்று விட்டது. ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி பெறுவது இது 4வது முறையாகும்.

முன்னதாக 1964, 1984, 2011ம் ஆண்டுகளில், ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா விளையாடியுள்ளது. இதில், 1964ம் ஆண்டு பைனல் வரை இந்தியா முன்னேறியது.

1984ம் ஆண்டு தனது பிரிவில் கடைசி இடத்தையே இந்தியாவால் பிடிக்க முடிந்தது. 2011ம் ஆண்டு கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து தொடரிலும், ஆஸ்திரேலியா, தென் கொரியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளிடம் தோல்வி கண்ட இந்தியா, தனது பிரிவில் கடைசி இடத்தையே பிடித்தது.

எனினும் தற்போது இந்திய அணி வெகுவாக முன்னேற்றம் கண்டிருப்பதால், 2019ம் ஆண்டில் சாதிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சுனில் சேத்ரி மகிழ்ச்சி

இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில், ‘’2015ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு எங்களால் தகுதி பெற முடியவில்லை. அது இன்னமும் என்னை வேதனைப்படுத்துகிறது.

தற்போது தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்துள்ளோம்.

2019ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடுவோம்’’ என்றார்.


.

மூலக்கதை