பழைய பத்திரிகை வாங்கியவருக்கு கிடைத்த அதிஷ்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பழைய பத்திரிகை வாங்கியவருக்கு கிடைத்த அதிஷ்டம்!

ஹொரணைப் பிரதேசத்தில்  நபர் ஒருவர் 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 5000 ரூபாய் தாள்கள் 60 கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
எனினும் இந்த பணம், அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
ஹொரணை, போருவெதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஆர். கருணாரத்ன என்பவர் பழைய பத்திரிகைகளைக் கொள்வனவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.
 
இவரின் உதவியாளரான வேலு சண்முகம் சேதரன், கடந்த 17 ஆம் திகதி வழக்கம் போன்று ஹொரணை நகர்ப் பகுதியில் தனது சிறிய லொறியில் பழைய பத்திரிகைகளை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
அதன்போது அப்பகுதியில் வந்த பெண்ணொருவர் அவர்களின் வாகனத்தை நிறுத்தி 10 கிலோ பழைய பத்திரிகைகளை 100 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
 
இவ்வாறு வாங்கிய பத்திரிகைகளை பொலித்தீன் பைகளில் பொதி செய்து கருணாரத்னவிடம் உதவியாளர் ஒப்படைத்துள்ளார்.
 
பொலித்தீன் பைகளில் இருந்த பத்திரிகைகளை கருணாரத்ன தரம் பிரித்த போது, அதற்குள் ரபர்பான்ட் கட்டப்பட்ட நிலையில் 3 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 5000 தாள்கள் 60 காணப்பட்டன.
 
இதேவேளை, பணத்தை பழைய பத்திரிகைகளுக்குள் வைத்த நபர் ஒருவர், வீட்டில் பணத்தைக் காணாத நிலையில் வீடு முழுவதும் தேடியுள்ளார். இதுகுறித்து மனைவியிடம் வினவிய போது, அவர் நடந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
 
இதனையடுத்து, பழைய சாதனங்களை விற்பனை செய்யும் உரிமையாளரான கருணாரத்னவிடம் சென்று பணம் காணாமல் போன விடயத்தைக் கூறியதுடன், விற்பனை செய்யப்பட்ட பத்திரிகைகளில் வீட்டின் காணி உறுதிப் பத்திரமும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
 
எனினும் அவர் கொள்வனவு செய்த பத்திரிகைக்குள் காணி உறுதிப் பத்திரம் காணப்படவில்லை என்றும் 3 இலட்சம் ரூபா பணம் மாத்திரமே இருந்ததாகக் கூறியதுடன், பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
 
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பணத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாயை கருணாரத்னவிற்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அவர் தனது பணத்தில் 20 ஆயிரத்தை தனது உதவியாளருக்கு வழங்கியுள்ளார்.
 
இதற்கு முன்னர் கருணாரத்ன முச்சக்கர வண்டி சாரதியாக இருந்த வேளை, 2 ½ பவுண் தங்கச்சங்கிலி ஒன்றும் 40 ஆயிரம் ரூபாவும் தனது முச்சக்கரவண்டியில் கண்டெடுத்த நிலையில் அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மூலக்கதை