சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலில் ரியல் மாட்ரிட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலில் ரியல் மாட்ரிட்

மாட்ரிட்: ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையே, பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வரும், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி போட்டிகள் 2 கட்டங்களை (லெக்) கொண்டது.

2 கட்டங்களிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். முதல் அரையிறுதி போட்டியில், மொனாகோ அணியை வீழ்த்தி ஜூவெண்டஸ் இறுதி போட்டிக்கு முன்னேறி விட்டது.

முதல் கட்டத்தில் 2-0, இரண்டாம் கட்டத்தில் 2-1 என மொத்தம் 4-1 என்ற கணக்கில் மொனாகோ அணியை ஜுவெண்டஸ் வீழ்த்தியது.

2வது அரையிறுதி போட்டியில், நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்-அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின.

இதன் முதல் கட்டத்தில் ரியல் மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2வது அரையிறுதி போட்டியின் 2ம் கட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடந்தது.

இதில், அத்லெடிகோ மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது. அத்லெடிகோ மாட்ரிட் அணியின் நிகுஸ் 12வது நிமிடத்திலும், கிறிஸ்மான் 16வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.



ரியல் மாட்ரிட் அணிக்கு இஸ்கோ 42வது நிமிடத்தில் கோல் அடித்தார். எனினும் முதல் கட்டத்தையும் சேர்த்து, மொத்த கோல்கள் அடிப்படையில் 4-2 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

11 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் இறுதி போட்டிக்கு முன்னேறியதில் ஆச்சரியமில்லை. கார்டிப் நகரில் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் ரியல் மாட்ரிட்-ஜுவெண்டஸ் அணிகள் மோதுகின்றன.

சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்ட முதல் அணி என்ற பெருமையை பெற ரியல் மாட்ரிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது.


.

மூலக்கதை