இந்தியாவின் இளம் டி20 டீம் ரசிகர்களின் கனவு அணி இதோ...

தினகரன்  தினகரன்

1. நிதிஷ் ராணா (23, மும்பை இந்தியன்ஸ்): டெல்லியை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன். அதிரடி ஆட்டக்காரர். மூன்றாவது வீரராக களமிறங்கி பந்தை பறக்க விடுகிறார். எதிரணி கவனம் முழுவதும் ரோகித், போலார்டு மீது படிந்திருக்க, யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். 8 லீக் ஆட்டத்தில் 3 அரை சதம் உட்பட 266 ரன் குவித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  2. ராகுல் திரிபாதி (26, புனே ரைசிங் ஸ்டார்ஸ்): மஹாராஷ்டிராவை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேன். புனே துவக்க வீரர். ரகானே, ஸ்மித், ேடானி, ஸ்டோக்ஸ் என்று நட்சத்திரக் குவியலுக்கு இடையே இருந்தாலும் துணிச்சலாக விளையாடி ஸ்பாட்லைட்டை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் திரிபாதி.3. விராத் கோஹ்லி (28, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்): தோள்பட்டை காயத்துக்கு பிறகு ரன் குவிப்பில் சற்று தடுமாறினாலும், கனவு அணி கேப்டன் இவர்தான். ஆக்ரோஷமான அணுகுமுறை, எப்போதும் வெற்றியை குறிவைக்கும் வியூகங்கள் இவரது ஸ்பெஷல். கோஹ்லியின் ஊக்கமும் உற்சாகமும் சக வீரர்களை உசுப்பேற்றி உத்வேகம் கொள்ள வைக்கும் என்பதால் அல்டிமேட் சாய்ஸ். 4. சுரேஷ் ரெய்னா (30, குஜராத் லயன்ஸ்): தேர்வுக் குழுவினரின் பார்வை வரம்புக்குள் வர முடியாமல் விரக்தியில் இருந்தவருக்கு ஐபிஎல் 10வது சீசன் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. மிக இயல்பாக பிக் ஷாட் விளையாடக்கூடிய ஒரு சில இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். அதிரடி பேட்டிங் மட்டுமல்ல… பீல்டிங், பார்ட் டைம் பவுலர் என கலக்குவார். லயன்ஸ் அணியை திறம்பட வழிநடத்துவதுடன் 8 போட்டியில் 309 ரன் விளாசி ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுதியுள்ள இந்த அனுபவ வீரரை அலட்சியப்படுத்தவே முடியாது.5. சஞ்சு சாம்சன் (22, டெல்லி டேர்டெவில்ஸ்): சூழலுக்கு ஏற்ற வகையில் விளையாடுவதில் கில்லாடி. வலதுகை பேட்ஸ்மேன் / விக்கெட்கீப்பர் என எப்படி வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஐபிஎல் தொடரில் முதல் சதம் அடித்தவர். இளமை + திறமை பச்சைக் கொடி காட்ட வைக்கிறது.6. மணிஷ் பாண்டே (27, நைட் ரைடர்ஸ்): இந்திய அணியில் ‘உள்ளே - வெளியே’ வீரர்களில் இவரும் ஒருவர். வலது கை பேட்ஸ்மேன். பார்க்க பூனையாக தெரிந்தாலும், திடீரென புலியாக மாறி மிரள வைப்பார். சிறந்த மிடில் ஆர்டர் வீரர். 8 ஆட்டத்தில் 260 ரன் விளாசி டாப் 10ல் நிலை கொண்டுள்ளார்.7. ஹர்திக் பாண்டியா (23, மும்பை இந்தியன்ஸ்): பரோடாவை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர். பீல்டிங்கிலும் பட்டையை கிளப்புவார். வலது கை பேட்ஸ்மேன் / மிதவேகப்பந்து வீச்சாளர். கொஞ்சம் பட்டை தீட்டினால், இந்தியாவின் அடுத்த கபில்தேவ் இவர்தான்.8. குருணல் பாண்டியா (26, மும்பை இந்தியன்ஸ்): ஹர்திக் பாண்டியாவின் அண்ணன். எந்த நிலையிலும் களமிறங்கி பந்தை விளாசுவதில் கைதேர்ந்தவர். இடது கை பேட்ஸ்மேன்/ சுழற்பந்து வீச்சாளர். விக்கெட் வேட்டையிலும் கவனம் ஈர்க்கிறார்.9. புவனேஷ்வர் குமார் (27, சன் ரைசர்ஸ் ஐதராபாத்): இந்த தொடரில் இந்திய பந்து வீச்சாளர்களில் இவர்தான் டாப். துல்லியமாக அவுட் ஸ்விங்கர் வீசுவதில் கில்லாடி. ரஞ்சியில் சதம் விளாசி உள்ளார். உடல்தகுதியை தக்கவைத்துக் கொண்டால் இவர்தான் இந்திய அணியின் பிரம்மாஸ்திரம். 10. யஜுவேந்திர சாஹல் (26, ராயல் சேலஞ்சர்ஸ்): டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலர். கூக்லி முறையில் பந்து வீசும் லெக் ஸ்பின்னர். ஒவ்வொரு பந்தையும் வித்தியாசமாக வீசி பேட்ஸ்மேன்களை குழப்புவதில் வல்லவர். போதிய வாய்ப்பு அளித்தால் பிரமாதமான எதிர்காலம் உண்டு.11. பாசில் தம்பி (23, குஜராத் லயன்ஸ்): ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிகம் கவர்ந்த ‘மலையாள எக்ஸ்பிரஸ்’ இவர்தான். எந்த நேரத்திலும் பதற்றமின்றி பந்து வீசி கவர்ந்து வருகிறார். இந்த 11 பேர் போக 12வது வீரர் என்ற இடத்துக்கு டெல்லி டேர்டெவில்ஸ் விக்கெட்கீப்பர்/ அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்டை தேர்வு செய்துள்ளனர். சாம்சன் சொதப்பினால் இவருக்கு வாய்ப்பாம்... ரைட்... ரசிகர்கள் தேர்வில் ரோகித் ஷர்மா, ரகானே, லோகேஷ் ராகுல், டோனி, ஜடேஜா போன்றவர்களுக்கு கூட வாய்ப்பில்லை பாருங்கள். மூன்று வித கிரிக்கெட்டுக்கும் ஒரே வீரர்கள் விளையாடினால், உடல் மற்றும் மனரீதியாக சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியங்களை பின்பற்றி பிரத்யேகமான இளம் டி20 அணியை உருவாக்குவதில் தப்பே இல்லை என்பது ரசிகர்களின் வாதம்... முயற்சிக்கலாமே?ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக கடந்த மாதம் முதல் டெஸ்டில் விளையாடிய அதே நேரம்... சொந்த மண்ணில் இலங்கையை எதிர்த்து டி20 போட்டியிலும் களமிறங்கியது. அட... இதென்ன கலாட்டா என்கிறீர்களா? உண்மைதான்... பிக் பாஷ் டி20 லீக்கில் சிறந்த வீரர்களை கொண்ட இளம் ஆஸி. அணிதான் இலங்கையை எதிர்கொண்டது. அதேபோல நமது கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் போட்டிகளை பார்த்து, ஒரு அணியை தேர்வு செய்திருக்கின்றனர். அந்த ட்ரீம் லெவன் அணியை பார்ப்போமா?

மூலக்கதை