பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை

மொழி மறந்து, இனம் மறந்து உலகம் எங்கும் இருக்கும் சினிமா பார்க்கும் பழக்கமுள்ள இந்தியன் பார்க்க ஆசைப்படும் படமாக மாறி இருக்கிறது பாகுபலி 2.

நடிகர்களை முன்னிலைப்படுத்தாமல் கதையையும், பிரம்மாண்டத்தையும் நம்பி அதற்குள் நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குநர் ராஜா மெளலி, மாநிலம் கடந்து மகதீரா படத்தின் மூலம் இந்திய மக்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பாகுபலி 1 & 2 படங்களின் மூலம் உச்சம் தொட்டு இந்திய சினிமாவின் முதல் குடிமகன் அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.

உலகமெங்கும் இருக்கின்ற சினிமா ரசிகன் இந்திய படமாக இல்லாமல் தன் மொழி, தன் நாட்டுப் படமாக பாகுபலி படத்தைப் பார்க்க முடியும். இந்தியப் படம் ஒன்று அதனைச் சாதித்திருக்கிறது. அதுதான் பாகுபலி.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா, உலக சினிமாவுக்கு பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறார் ராஜமெளலி.

முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்க முடியும் என்கிற விதியை உடைத்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உலக சினிமா வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக சில நூறு கோடிகளில் படம் தயாரித்து நாம் வெற்றிப் பெற முடியும் என்பதை இந்திய சினிமாவிற்கு சொல்லியிருக்கும் படம் பாகுபலி

தெலுங்கு மொழி நடிகர்களை பிரம்மாண்டத்தில் உள் வைத்து படமெடுத்து அதனை 'சர்வதேச சினிமா சந்தையில்' லாபகரமாக வியாபாரம் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கையை இந்திய சினிமாவிற்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார் பாகுபலி படம் மூலம் ராஜமெளலி.

திரையரங்குகளை நடத்தலாமா அல்லது தொழிலை மாற்றிவிடலாமா என்ற நீண்ட ஆலோசனையில் புற நகர் தியேட்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் படமாக பாகுபலி ஓபனிங் தமிழகத்தில் இருந்தது.

ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை வெளிவந்த எந்த தமிழ் படமும் தியேட்டர்களில் வசூலை வாரிக் குவிக்கவில்லை.

வேற்று மொழி நடிகர்கள் நடித்த படமான பாகுபலி தியேட்டர்களுக்கு தொழிலை தொடர நன்னம்பிக்கை முனையாகத் தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் சுமார் 600 திரைகளில் பாகுபலி திரையிடப்பட்டிருப்பதன் மூலம் நேற்றைய தினம் சுமார் ரூ 15 கோடி வரை மொத்த வசூல் ஆகியிருப்பதாக தகவல் வருகிறது.

மேற்குறிப்பிட்ட வசூல் நியாயமான டிக்கட்டில் வசூல் ஆனது இல்லை என்பது உண்மைதான். ஆனால் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றான் என்பதை அறிய ஆர்வம் கொண்டு வரும் மக்களிடம் பற்றாக்குறைக்கு ஏற்ப டிக்கட் விலை அதிகரிக்கப்பட்டதால் வந்த வசூல்.

திங்கட்கிழமைக்கு பின்னரே இதன் ஒரிஜினல் வசூல், தமிழகத்தில் இப்படம் என்ன வசூல் செய்யும் என்பதை கணிக்க முடியும்.

இந்தியாவுக்கும், இந்திய சினிமாவுக்கும் பாகுபலி படம் மூலம் பெருமை சேர்த்திருக்கும் ராஜமெளலி சர்வதேச சினிமா சந்தையில் ஜெயிக்கும் சூட்சமத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

350 கோடியில் தயாரிக்கப்பட்ட பாகு பலி படம் 480 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது. உலகம் முழுமையும் இப்படம் சுமார் 1000 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

பல மொழிகளில் வெளியான படம் என்ற பெருமையும், முதல் நாள் 125 கோடி வசூலைத் தொட்ட படம் என்கிற பெருமையும் பாகு பலிக்கு கிடைத்திருக்கிறது.

- ராமானுஜம

மூலக்கதை