போர்ஷே ஓபன் டென்னிஸ் களமிறங்கினார் மரியா ஷரபோவா

தினகரன்  தினகரன்

ஸ்டட்கர்ட்: ஊக்கமருந்து தடை முடிந்து மீண்டும் களமிறங்கிய ரஷ்யாவின் மரியா ஷரபோவா, போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடரின் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடக்கும் இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிறப்பு அனுமதியுடன் பங்கேற்ற ஷரபோவா, முதல் சுற்றில் இத்தாலியின் ராபர்டா வின்சியை எதிர்த்து விளையாடினார். 15 மாத இடைவெளிக்கு பிறகு வரும் ஷரபோவாவை ரசிகர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். ஆரம்பத்தில் சற்று திணறிய ஷரபோவா, பின்னர் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இப்போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஷரபோவா, 34 வயதான வின்சியை வீழ்த்தினார். 2வது சுற்றில் ஷரபோவா, சக நாட்டவரான கேத்ரினா மகரோவாவை சந்திக்கிறார்.  கடந்த ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் கால் இறுதியில் செரீனா வில்லியம்சுக்கு எதிரான தோல்வியை சந்தித்த ஷரபோவா அதன் பிறகு ஊக்க மருந்து பயன்படுத்ததாக எழுந்த புகாரில் 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டார். பின்னர் அவர் மீதான தடை 15 மாதமாக குறைக்கப்பட்டது. தற்போது 15 மாத தடை முடிந்தது ஷரபோவா மீண்டும் பழைய படி டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வந்துள்ளார். தனது முதல் வெற்றி குறித்து அவர் கூறுகையில், ‘இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன். களத்தில் மீண்டும் கால் வைத்ததை, இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த உணர்வாக கருதுகிறேன்’ என்றார்.முகுருசா அதிர்ச்சி: நேற்று நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் 5ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா 6-2, 6-7, 1-6 என்ற செட்களில் எஸ்தோனியாவின் கோன்டவெயிட்டிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

மூலக்கதை