கேகேஆர் அணிக்கு டோனியை வாங்க எனது உடைகளை கூட விற்க தயார் : ஷாருக்கான் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேகேஆர் அணிக்கு டோனியை வாங்க எனது உடைகளை கூட விற்க தயார் : ஷாருக்கான் அதிரடி

கொல்கத்தா: சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு, ஸ்பாட் பிக்சிங் வழக்கில், 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஐபிஎல் சீசனில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 8 ஆண்டுகள் இருந்த டோனியை புனே அணி வாங்கியது. ஆனால் தற்போது நடந்து வரும் 10வது சீசனுக்கு முன்னதாக டோனியை திடீரென கேப்டன் பதவியில் இருந்து புனே அணி நிர்வாகம் நீக்கியது.

கடந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டுமே ஈட்டியதால், கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது.

இதனால் சாதாரண விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக மட்டும் புனே அணியில் டோனி நீடித்து வருகிறார்.

இதனிடையே 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 11வது சீசனுக்கான ஏலத்தில், டோனியின் பெயர் வந்தால் அவரை வாங்க தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கூறியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்சியில் டோனி விளையாடுவதை காண விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், ‘டோனியை வாங்குவதற்காக எனது உடைகளை கூட விற்க தயாராக உள்ளேன்.

ஆனால் அதற்கு குறைந்தபட்சம் டோனியின் பெயர் ஏலத்தில் வர வேண்டும்’ என்றார். அத்துடன் வேலையில் ‘பிஸியாக’ இருப்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் தன்னால் மைதானத்திற்கு வர முடியவில்லை எனவும் ஷாருக்கான் தெரிவித்தார்.


.

மூலக்கதை