பெண் புலி உறுப்பினருக்கும் இராணுவ கோப்ரலுக்கும் பிணை

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
பெண் புலி உறுப்பினருக்கும் இராணுவ கோப்ரலுக்கும் பிணை

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் புலி உறுப்பினர், இராணுவ கோப்ரல் உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெல்லவாயவுக்கு மார்ச் மாதம் 13ஆம் திகதியன்று விஜயம் செய்திருந்தபோது இந்த நால்வரும், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மார்ச் 28ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  

சந்தேகநபர்கள் நால்வரும், அன்றையதினம் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தியபோது, நீதவான் கேஷர சமரதிவாகர, தலா 100,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்தார்.  

இதேவேளை, வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.  

கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நால்வரில் ஒருவர் இராணுவ உறுப்பினரொருவரின் தாய் என்றும் மற்றையவர் முச்சக்கரவண்டி சாரதி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

பெண் புலி உறுப்பினர், 1998 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலும் புலிகள் அமைப்பின் சிறப்பு அதிரடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளார். அந்த புலி உறுப்பினர் 2009ஆம் ஆண்டு, வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று, அங்கிருந்து 2010 ஆம் ஆண்டு வெளியேறியுள்ளார்.  

இராணுவ கோப்ரல், கிழக்கு மாகாணத்தில் உள்ள படைமுகாமில் இன்னும் சேவையில் ஈடுபடுகின்றார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு குழந்தை பிறந்துள்ளது. அது தொடர்பில் சட்ட ஆலோசனை பெறுவதற்காக சென்றுகொண்டிருந்த போதே, 119 என்ற அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.  

மூலக்கதை