நியூசிலாந்துக்கு எதிரான ஹாமில்டன் டெஸ்ட்: கடைசி நாளில் மழையால் தோல்வியை தவிர்த்தது தெ.ஆ

தினகரன்  தினகரன்

ஹாமில்டன்: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்தது. முதலில் நடந்த ஒரே ஒரு டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதன்பின் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவே கைப்பற்றியது. கடைசியாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி டிரா ஆக, 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என தென் ஆப்ரிக்கா முன்னிலை வகித்த நிலையில், கடைசி டெஸ்ட் ஹாமில்டனில் கடந்த 25ம் தேதி தொடங்கியது.  முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டி காக் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட் கைப்பற்றினார். நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் கேன் வில்லியம்சன் 176 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்கா தரப்பில் மோர்னே மோர்கல், ரபாடா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 175 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி கொண்டிருந்தது. டூ பிளசிஸ், டி காக் தலா 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் 95 ரன் பின்தங்கியிருந்ததால், 5வது மற்றும் கடைசி நாளான இன்று நியூசிலாந்து எளிதாக வெற்றி பெறும் என கருதப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், போட்டி டிரா ஆனது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது. ஏற்கனவே டி20, ஒரு நாள் தொடர்களை இழந்த நியூசிலாந்து, டெஸ்ட் தொடரை சமன் செய்வதற்கு இருந்த வாய்ப்பும் மழையால் பறிபோனது. 2வது இடத்திற்கு முன்னேற்றம் ஏப்ரல் 1ம் ேததியை அடிப்படையாக வைத்து, டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் அணிகளுக்கு, ஐசிசி பரிசு வழங்கி வருகிறது. இதன்படி நம்பர்-1 இடத்தில் உள்ள அணியான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம், நம்பர்-1 இடத்தை தக்க வைத்து கொண்டது. இதன் மூலம் ஐசிசியின் ரூ.6.5 கோடி பரிசை வென்றது. இதனிடையே தரவரிசையில் 3வது இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பதன் மூலம், இன்று 2வது இடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு ஐசிசியின் ரூ.3.25 கோடி பரிசாக கிடைக்க உள்ளது. 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, ஐசிசியின் பரிசை பெறுவதற்கான கடைசி நேரத்தில் 3வது இடத்திற்கு பின்தங்கியதால் வெறும் ரூ.1.30 ேகாடியை மட்டுமே பெறும்.

மூலக்கதை