இந்தியா - பாக்., கிரிக்கெட் தொடரை துபாயில் நடத்த அனுமதி வேண்டும் : உள்துறை அமைச்சகத்திற்கு BCCI கடிதம்

தினகரன்  தினகரன்

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை துபாயில் நடத்த அனுமதி அளிக்க கோரி உள்துறை அமைச்சகத்திற்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த கிரிக்கெட் தொடரை நடத்த கடிதத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்தியா மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. ஷஷாங் மனோகர் பிசிசிஐ தலைவராக இருந்த போது,  இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே குறுகிய கால கிரிக்கெட் தொடரை நடத்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.  ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது துபாயில் கிரிக்கெட் தொடர் நடத்த அனுமதி அளிக்க கோரி உள்துறை அமைச்சகத்திற்கு, பிசிசிஐ சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவிவிதுள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசின் நிலை என்ன என்பது பற்றி தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் கடந்த முறை இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியது. தற்போது எதிர்கால கிரிக்கெட் தொடர் அட்டவணையை நிறைவேற்ற வேண்டும் என்ற சூழல் உள்ளது. இதனால் தான் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்த BCCI விரும்புகிறது என்றார். ஆனால் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை நடத்த அரசின் அனுமதி இல்லாமல் பிசிசிஐ எதுவும் செய்யாது என்றார். மத்திய அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில் துபாயில் இரு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை