ரூ.2,000 கோடி போதை வழக்கு - நடிகைக்கு கைது வாரன்ட்

தினமலர்  தினமலர்
ரூ.2,000 கோடி போதை வழக்கு  நடிகைக்கு கைது வாரன்ட்

பாலிவுட் நடிகை, மம்தா குல்கர்னி, சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் விஜய்கிரி எனப்படும் விக்கி கோஸ்வாமி ஆகியோருக்கு எதிராக, 2,000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில், ஜாமினில் வரமுடியாத, கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், 2014, ஏப்ரலில், சோலாப் பூர், தானே, மும்பை நகரங்களில், போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில், விலை மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் விக்கி கோஸ்வாமிக்கும், ஆப்பிரிக்க நாடான, கென்யாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும், இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கண்டுபிடிக்கப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு, 2,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.

இதுதொடர்பாக நடந்த தீவிர விசாரணைகளில், முன்னாள் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, 44, போதை கடத்தலில் முக்கிய பங்கு வகித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துள்ள மம்தா, 1991ல், வெளியான, நண்பர்கள் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு, தானே நகரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போதை பொருள் கடத்தலில், நடிகை மம்தா குல்கர்னியும், விக்கி கோஸ்வாமியும் முக்கிய பங்கு வகித்ததற்கான, உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இருவரும், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக, வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், நடிகை மம்தா குல்கர்னி, விக்கி கோஸ்வாமி ஆகிய இருவருக்கு எதிராக, ஜாமினில் வரமுடியாத, வாரன்ட் உத்தரவை பிறப்பித்தனர்.

மூலக்கதை