4,580 பேருக்கு கிழக்கில் டெங்கு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
4,580 பேருக்கு கிழக்கில் டெங்கு

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்  

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் டெங்குக் காய்ச்சலினால் 18 மரணங்கள் சம்பவித்துள்ளதோடு, 4,580 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தம் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், திங்கட்கிழமை (27) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் டெங்குக் காய்ச்சல் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.  

தொடர்ந்து அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘டெங்குக் காய்ச்சலினால் கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 9 மரணங்களும் குறிஞ்சாக்கேணி பிரதேச சபை பிரிவுக்குள் 3 மரணங்களும் மூதூர், குச்சவெளி, திருகோணமலைப் பிரதேசங்களில் தலா ஒன்றுமாக 15 மரணங்கள் திருகோணமலை மாவட்டத்திலும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பிரதேசம், காத்தான்குடி, செங்கலடி பிரதேங்களிலுமாக 3 மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சம்பவித்துள்ளன.  

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பிரதேசத்தில் மரணித்தவர் கொழும்பில் வசித்து அங்கிருந்து நோய்த் தொற்றினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் ஆவார்.  

டெங்கு நோயாளிகளாக திருகோணமலை மாவட்டத்தில் 2,680 பேரும் மட்டக்களப்பு 960 பேரும் கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 827 பேரும் அம்பாறை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 113 பேருமாக மொத்தம் 4,580 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.  
டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

உள்ளூராட்சிச் சபைகளின் உதவியோடு கிராமப்புறங்களில் இருக்கின்ற காணிகள், பாவிக்கப்படாத கிணறுகளையும் துப்புரவு செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு மேலதிகமான இன்புளுவன்சா, ஏ.எச்.என் 01 காணப்படும் இடங்களினை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமாகத் தேவையாக இருக்கிறது’ என்றார்.  

மூலக்கதை